சிறப்பு செய்திகள்

சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் இந்தியாவில் 2-வது இடம் பிடித்து சாதனை – முதலமைச்சர் பாராட்டு

சென்னை

இந்தியாவில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களின் பட்டியலில் சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

காவல் நிலையங்களின் தரத்தினை அளவிடுவதற்கும், அவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் சில குறிப்பிட்ட வரையறைகளை வகுக்குமாறு 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதனடிப்படையில், மத்திய உள் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் இந்தியாவில் சிறப்பாகச் செயல்படும் 10 காவல் நிலையங்களில் பட்டியலை வெளியிட்டுவருகிறது.

நடப்பாண்டிற்கான சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட காவல் நிலையங்களைத் தேர்ந்தெடுக்க சுமார் 16 ஆயிரத்து 671 காவல் நிலையங்களில் மக்கள் கருத்துக் கணிப்பு, காவல் துறையின் செயல்முறை, பதிவான குற்ற விவரம் எனப் பல்வேறு ஆய்வுசெய்ததாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.மத்திய உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தின் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில் மணிப்பூரின் தௌபால் காவல் நிலையம் முதல் இடத்திலும், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் சங்க்லாங்க் காவல் நிலையம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. தெலங்கானா மாநிலத்தின் கரீம் நகர் காவல் நிலையம் டாப் 10 பட்டியலில் பத்தாம் இடத்தைப் பெற்றுள்ளது.

முதலமைச்சர் பாராட்டு

சிறப்பான செயல்பாடுகளில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் மிகச் சிறப்பாகச் செயல்படும் பட்டியலில் சேலம் மாவட்டம்- சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் 2-வது இடம் பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது.தேசிய அளவில் தமிழகத்தின் பெருமையை உயர்த்திய சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு எனது பாராட்டுக்கள்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்தியுள்ளார்.