தற்போதைய செய்திகள்

உயர்மட்ட மேம்பாலம் கோவையின் புதிய அடையாளம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி

கோவை

கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த மேம்பாலம் கோவையின் புதிய அடையாளம் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பீட்டில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.10 கிலோ மீட்ட தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட உள்ளது. சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடந்த பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். இவ் விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து மேம்பாலத்திற்கான பணிகள் துவங்குவதற்கான பூமிபூஜை கோவையில் நேற்று நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஓயாது பணியாற்றி வருகிறார். கோயம்புத்தூர் மாவட்ட வளர்ச்சிக்கு எந்தவொரு பணியாக இருந்தாலும் அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் எந்த கேள்வியும் மறுப்புமின்றி உடனே ஒப்புதல் தந்து நிதியையும் வாரி வழங்கி வருகிறார். அதனால்தான் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சிப் பணிகள் கடந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது.70 ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கோவை நகரமெங்கும் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

மாவட்டத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவருவதால், தொழில் முனைவோர் பலரும் நம்பிக்கையுடன் இங்கு தொழில் துவங்க முன் வந்துள்ளனர். இதனால் வேலைவாய்ப்பு பெருகும் சூழல் உருவாகியுள்ளது. சாலை, மேம்பாலங்கள் என கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு மக்களின் தேவையை உணர்ந்து குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தேசத்துக்கே முன் மாதிரியாக 24 ஒ 7 குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

கோவை மாநகரின் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக விளங்கும் நொய்யலை புனரமைக்கும் திட்டம் ரூ.230 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இனி மழைக்காலங்களில் நீர் வீணாக வாய்ப்பேயில்லை. அதேபோன்று நொய்யல் பாயும் குளங்களும் புத்துயிரும் புதுப்பொலிவும் பெற்று வருகின்றன.

ரூ.1500 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் உள்ளிட்ட எட்டு குளங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோடுகள் மாதிரிச்சாலைகளாக மாற்றப்படுகின்றன. இந்த பணிகள் முடியும்போது கோவை நகரமே புதிய சுற்றுலா நகரமாக உருவெடுப்பது உறுதி.

இந்தப் பணிகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ரூ.1621.30 கோடி மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. கோவையின் புதிய அடையாளமாக மாற இருக்கும் இந்த பறக்கும் பாலத்துக்கு முதலமைச்சர் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சரால் 21.11.2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று இப்பணிகள் தொடங்கி வைக்கப்படுகின்றது.

கோவை மாநகரின் பிரதான சாலையாக கருதப்படும் அவினாசி சாலையில் தான் விமான நிலையம், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், டைடல் பார்க் போன்றவை அமைந்துள்ளன. சேலம், ஈரோடு, திருப்பூர் என பல முக்கிய நகரங்களுக்கும் முக்கிய வழித்தடமாகவும் இருப்பதால், போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் 10.10 கி.மீ நீளத்தில் பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது.

இனிவரும் 30 ஆண்டுகளுக்கு இருக்கும் வாகனப்பெருக்கத்தையும் எதிர்கொள்ளும் வகையில் இப்பாலம் அமைக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 10.10 கிமீ நீளத்திற்கு அமையவுள்ள இந்த பாலம், 17.25 மீ அகலத்தில் நான்கு வழிப்பாதையாக அமையவுள்ளது. நான்கு இடங்களில் ஏறுதளமும், நான்கு இடங்களில் இறங்கு தளமும் 6 மீட்டர் அகல ஓடுபாதையுடன் அமையவுள்ளது. இப்பணியில் 10.50 மீட்டர் அகலத்தில் இரு புறமும் சேவைச் சாலையும், 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் அமையவுள்ளது.

இப்பாலம் அமையவுள்ள கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை முக்கியமான ஐந்து இடங்களில் சுரங்கநடைபாதை அமையவுள்ளது. மேலும் மூன்று இடங்களில் சிறுபாலங்களை அகலப்படுத்துதல் மற்றும் மூன்று இடங்களில் சிறுபாலங்களை திரும்பக்கட்டுதல் பணியும் நடைபெறவுள்ளது. இந்த பாலம் கட்டி முடிக்கப்படும்போது, தமிழகத்தின் மிக நீளமான பாலம் என்ற பெருமையைப் பெறுவதுடன்;. கோவையின் புதிய அடையாளமாகவும் இருக்கும்.

இன்னும் கோவை மாநகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் மூலமாக கள ஆய்வு நடந்து வருகிறது. விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகளை துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கு புறவழிச்சாலை, பஸ் போர்ட் என பல்வேறு திட்டப்பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

காலம் கடந்தும் பேசும் பல கற்பனைத் திட்டங்களும் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அம்மா அவர்களின் வழியில் மக்களுக்கு நலன்பயக்கும் வகையில் இதுபோன்ற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.