தற்போதைய செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமுக தேர்தல் – மாமல்லபுரம், இடைக்கழிநாடு பேரூராட்சிகளில் கழகம் வெற்றி

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், இடைகழிநாடு பேரூராட்சிகளில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்று தலைவர் பதவிகளை கைப்பற்றினர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு கழகத்தின் சார்பில் 11-வது வார்டு கவுன்சிலர் வளர்மதி யஸ்வந்த்ராவ், தி.மு.க. சார்பில் 4-வது வார்டு கவுன்சிலர் கஜலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர்.

தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான கணேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த மறைமுக தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வளர்மதி யஸ்வந்ராவ் 9 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதேபோல் இந்த பேரூராட்சியின் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் 15-வது வார்டு கழக கவுன்சிலர் ஜி.ராகவன் வெற்றிபெற்றார்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் கழகத்தின் சார்பில் 15-வது வார்டு கழக கவுன்சிலர் சமியுத்தா போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து தி.மு.க சார்பில் 12-வது வார்டு கவுன்சிலர் லட்சுமி போட்டியிட்டார். இதில் கழக கவுன்சிலர் சமியுத்தா 11 வாக்குகள் பெற்று தலைவராக வெற்றிபெற்றார். இந்த பேரூராட்சியில் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இதனால் மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

மாமல்லபுரம், இடைக்கழிநாடு பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலில் வெற்றிபெற்ற கழக கவுன்சிலர்கள் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மாவட்ட கழக துணை செயலாளர் யஸ்வந்த்ராவ் மற்றும் கழக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.