சிறப்பு செய்திகள்

சென்னை பெரும்பாக்கத்தில் 1152 அடுக்குமாடி குடியிருப்புகள் – முதலமைச்சர் முன்னிலையில் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

சென்னை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், பிரதமரின் வீட்டுவசதி (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ், உலக அளவிலான வீட்டுவசதி கட்டுமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சென்னை பெரும்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டப்பணிகளுக்கு நேற்று காலை பிரதமர் நரேந்திரமோடி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

உலக அளவிலான வீட்டுவசதி கட்டுமான தொழில்நுட்பம் – இந்தியா திட்டத்திற்காக, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் 6 மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தை தேர்வு செய்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் அதிக நகர்ப்புறங்களை கொண்டுள்ளது.மொத்த மக்களில் 48.45 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அதில், 14.63 லட்சம் குடும்பத்தினர் நகர்ப்புறங்களில் உள்ள குடிசைப் பகுதியில் வாழ்கின்றனர்.

2023ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை குடிசைகளே இல்லாத நகரங்களாக உருவாக்குவதே புரட்சித்தலைவி அம்மாவின் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023 ஆகும். நகர்ப்புற ஏழை மக்களின் வீட்டு வசதிக்கான தேவைகளை உணர்ந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் படுக்கை அறை, ஹால், சமையல் அறை, கழிவறை, குளியல் அறை, பால்கனி ஆகியவற்றை குறைந்தபட்சம் 400 சதுரஅடி பரப்பளவில் மின்விசிறி உள்ளிட்ட எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் வசதியுடன் கட்டப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பிஎம்ஏஒய்-கிராமின் என்ற பிரதமர் வீட்டுவசதி திட்டப்படி, ஒரு வீட்டுக்கு ரூ.1.20 லட்சம் செலவிடப்படுகிறது. இதில் ரூ.72 ஆயிரம் மத்திய அரசும், ரூ.48 ஆயிரத்தை மாநில அரசும் வழங்குகிறது. இதில் கான்கிரீட் கூரை அமைப்பதற்காக கூடுதலாக ரூ.50 ஆயிரத்தை மானியமாக மாநில அரசு வழங்குகிறது.மேலும் கூடுதலாக ஒவ்வொரு பயனாளிகளுக்கும் கழிவறை கட்டுவதற்காக நரேகா திட்டத்தின் கீழ் ரூ.23 ஆயிரம் வழங்கப்படுகிறது.

சமீபத்தில் இந்த திட்டம் குறித்து நான் ஆய்வுகள் மேற்கொண்டேன். ஏழைகளிலும் ஏழையாக இருப்போருக்கு, விலைவாசி உயர்வினாலும், கொரோனாவினால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பினாலும் அந்த தொகையில் வீடு கட்ட முடியாது என்பதை உணர்ந்து ஒவ்வொரு வீடு கட்டுமானத்திற்கும் கூடுதலாக ரூ.70 ஆயிரம் தொகையை அனுமதித்து உத்தரவிட்டேன். இதன் அடிப்படையில் ஒரு வீட்டுக்கான செலவு ரூ.1.70 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு 2.5 லட்சம் வீடுகளை கட்டுவதற்கு ரூ.1,805 கோடி செலவாகிறது.

பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ரூ.27 ஆயிரம் கோடி செலவில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 720 அடுக்குமாடி குடியிருப்புகள், 3 லட்சத்து 42 ஆயிரத்து 769 தனி வீடுகள் கட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.உலக அளவிலான வீட்டுவசதி கட்டுமான தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் சென்னை பெரும்பாக்கம் பகுதியில் 413 சதுரஅடி பரப்பளவில் ரூ.116.27 கோடி செலவில் 1,152 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் அங்கு ரேஷன் கடை, 2 அங்கன்வாடி மையங்கள், ஒரு நூலகம், ஒரு பால் பூத், 6 கடைகள் போன்ற சமூக வசதிகளும் இந்த திட்டத்தில் அடங்கியுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், துணை மின்நிலையம் ஆகிய வசதிகளும் அங்கு செய்து தரப்படும்.

இந்த திட்டம் 15 மாதங்களுக்குள் நிறைவு பெறும். பேரிடர் பாதுகாப்பு வசதிகளுடன் அவை கட்டப்படும். சென்னையில் நீர் நிலைகளின் ஓரங்களிலும், ஆட்சேபனைக்குரிய இடங்களிலும் வசிக்கும் நகர்ப்புற ஏழைகளின் (குடிசைவாசிகள்) குடும்பத்தினருக்கு அந்த அடுக்குமாடிகள் ஒதுக்கப்படும். இத்தகைய திட்டங்களில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதில் தமிழ்நாடு அரசு மகிழ்ச்சி அடைகிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

விழாவில் தலைமைச் செயலாளர் க.சண்முகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.