தற்போதைய செய்திகள்

புதிய இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சி, காந்தி நகர், விநாயகர் கோயில் அருகில் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி, திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு புதிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து கோயில் திருப்பணிகளுக்கான உத்தரவு ஆணையை வழங்கினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், முதலமைச்சரால் 2020-2021-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் நிர்வாக நலன் கருதி தமிழ்நாட்டில் ரூ.9.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக 9 இணை ஆணையர் அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு அலுவலகத்திற்கும் 19 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய, புதிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை இணை ஆணையர் மண்டலத்தின் பட்டியலில் சேர்ந்த 255 திருக்கோயில்களும், திருவண்ணாமலை உதவி ஆணையர் பிரிவில் பட்டியலில் சேராத 1127 திருக்கோயில்களும், கிருஷ்ணகிரி உதவி ஆணையர் பிரிவில் பட்டியலில் சேராத 1284 திருக்கோயில்களும், என மொத்தம் 2666 திருக்கோயில்கள் உள்ளன.