தற்போதைய செய்திகள்

சேலம் நங்கவள்ளி பேரூராட்சியில் மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு – நடத்த விடாமல் தி.மு.க.வினர் ரகளை

சேலம்

தி.மு.க.வினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் சேலம் நங்கவள்ளி பேரூராட்சி மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் இரண்டு வார்டுகளிலும், பா.ம.க. இரண்டு வார்டுகளிலும், பா.ஜ.க. ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் தி.மு.க. 3 வார்டுகளிலும், காங்கிரஸ் மூன்று வார்டுகளிலும், மீதி உள்ள 4 வார்டுகளில் சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் கழகத்திற்கு ஆதரவாக வாக்களிக்க 3 சுயேச்சை கவுன்சிலர்கள் தயாராக இருந்தனர். மேலும் பா.ம.க கவுன்சிலர்கள் இரண்டு பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த ஒரு கவுன்சிலரும் கழகத்திற்கு ஆதரவு அளித்து இருந்தனர்.

எனவே கழகத்தை சேர்ந்தவர் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் தி.மு.க.வினருக்கு, ஒரு சுயேச்சை உட்பட 7 பேர் மட்டுமே ஆதரவு அளித்ததால் அக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல் போனது.

இந்நிலையில் நேற்று நங்கவள்ளி பேரூராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனகிருஷ்ணன் முன்னிலையில், பேரூராட்சி தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் அங்கு கூடியிருந்த தி.மு.க.வினர் தங்களுக்கு வாய்ப்பு பறிபோகும் என்கிற ஆத்திரத்தில் ரகளையில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமல்லாமல் தி.மு.க. பெண் கவுன்சிலர் உட்பட சிலர் நாற்காலியை தூக்கி வீசியும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.