தமிழகம்

திருமணத்தை பதிவு செய்ய புதிய வசதி – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

மணமக்களின் வசிப்பிடம் அருகே திருமண பதிவு மேற்கொள்ளும் புதிய வசதியை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம், 2009 பிரிவு 5(1)-ன் படி தமிழ்நாடு மாநிலத்தில், திருமணம் நடைபெறும் இடத்தின் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணம் பதிவு செய்ய இயலும் என்ற நிலை இருந்தது. இதனை எளிமைப்படுத்தும் நோக்குடன் 2020-2021-ம் ஆண்டு அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்த பதிவுத்துறை மானிய கோரிக்கையில், மணமகன் மற்றும் மணமகள் இருப்பிடம் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகங்களிலும் திருமணத்தை பதிவு செய்யும் புதிய வசதியை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம், 2009-ல் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம், 2009 பிரிவு 5(1)-ல் கீழ்கண்ட சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம், 2009-ன் படி அனைத்து தரப்பினருக்கான திருமணங்களும் கட்டாய பதிவு செய்யப்பட வேண்டும் என்பதனை அனைவரும் பின்பற்றும் விதமாக திருமணம் நடைபெற்ற இடத்திலுள்ள சார்பதிவகம் மற்றும் மணமக்கள் இருவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள சார்பதிவகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் திருமணப்பதிவினை மேற்கொள்ளலாம். எனவே, மேற்குறிப்பிட்ட வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.