தென்காசி மாவட்டத்தில் 41 அம்மா மினி கிளினிக் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தகவல்

தென்காசி
தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் 41 அம்மா மினி கிளினிக் அமையவுள்ளது என்று அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி கூறி உள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரம் வீரசிகாமணி, வாசுதேவநல்லூர் வட்டாரம் நெல்கட்டும்செவல், கடையநல்லூர் வட்டாரம் காசிதர்மம், செங்கோட்டை வட்டாரம் கிளாங்காடு ஆகிய கிராமங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கீ.சு.சமீரன் தலைமையில், வாசுதேவநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அ.மனோகரன், மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா ஆகியோர் முன்னிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசியதாவது:-
முதலமைச்சர் கிராமபுறங்களில் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் 41 அம்மா மினி கிளினிக் அமையவுள்ளது. தற்போது வரை தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி, அழக நேரி, வெள்ளாளன்குளம், கடம்பன்குளம் ஆகிய இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.அம்மா மினி கிளினிக் மூலமாக ஏழை, எளிய மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அங்கேயே அவர்கள் தங்கள் உடலில் ஏற்படுகின்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள இயலும். இது வரலாற்றுச் சாதனையாகும்.
இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா ரூ.2000 மதிப்புள்ள அம்மா பரிசு நலப்பெட்டகத்தை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கலுசிவலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன், ஒன்றிய கழக செயலாளர்கள் கடையநல்லூர் வடக்கு வசந்தம் முத்துபாண்டியன், செங்கோட்டை செல்லப்பன், சாம்பவர் வடகரை மூர்த்தி, சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், பேரங்காடி துணைத்தலைவர் வேல்சாமி, முன்னாள் ஆவின் தலைவர் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.