சிறப்பு செய்திகள்

தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயலுக்கு கழகம் கண்டனம்- ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை

கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து விட்டு, இன்று ஆவின் பொருட்களின் விலையை தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளதை பார்க்கும்போது, ஒரு பக்கம் மக்களுக்கு கொடுப்பது போல் கொடுத்து விட்டு மறுபக்கம் அவற்றை பிடுங்கும் முயற்சியில் ஈடுபடுவது தெளிவாக தெரிகிறது. இது ஏழை, எளிய மக்களை ஏமாற்றும் செயல். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோத செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என்றழைக்கப்படும் ஆவின் நிறுவனம் பால் மட்டுமல்லாமல் அதன் உப பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பாதாம் பவுடர், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறது. பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்த தி.மு.க. அரசு தற்போது அனைத்து உப பொருட்களின் விலையினையும் உயர்த்தியுள்ளது.

வெளிச்சந்தையை ஒப்பிடும்போது, தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்க்ரீம், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் ஆவின் விற்பனை நிலையங்கள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, பொதுமக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், ஆவின் பால் மற்றும் அதன் உப பொருட்களையே வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆவின் விற்பனை நிலையங்களில் பால் உப பொருட்களின் விலை நேற்று முதல் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. உதாரணமாக, 27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல், 515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சாதாரண நெய் விலை 535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200 கிராம் பாதாம் பவுடர் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக, அதாவது 25 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.

சிறிய ஐஸ்க்ரீம் வகைகளும் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கோடை காலம் ஆரம்பிக்க இருக்கின்ற சூழ்நிலையில், பால் உப பொருட்கள் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவற்றை பொதுமக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள் இன்னும் அதிகம் வாங்கக்கூடிய நிலையில், இந்த விலை உயர்வு மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தொற்று ஓரளவு குறைந்து இயல்பான நிலைமை திரும்பி கொண்டிருக்கின்ற இந்த சமயத்தில், உக்ரைன்-ரஷ்யா போரினால் பெட்ரோல் விலை, டீசல் விலை ஆகிய எந்த அளவுக்கு உயர போகிறதோ, அதன்மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை எந்த அளவுக்கு உயர போகிறதோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கின்ற இந்த தருணத்தில், யாரும் எதிர்பாரரத விதமாக பால் உப பொருட்களின் விலையை உயர்த்தி மக்கள் மீது தி.மு.க. அரசு கூடுதல் சுமையை சுமத்தியுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டதை ஈடுசெய்ய வேண்டும் என்ற நோக்கில் பால் உப பொருட்களின் விலையை அரசு உயர்த்தியுள்ளதாக பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆவின் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக உள்ளது.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு அறிவிக்கப்பட்டுள்ள ஆவின் பொருட்களுக்கான விலை உயர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.