சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

தி.மு.க. குண்டர்கள் தாக்கியதில் கழக தொண்டர்கள் படுகாயம் – முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கண்டனம்

திருப்பத்தூர்

உதயேந்திரம் பேரூராட்சி மறைமுக தேர்தலில் வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் தாக்கியதில் கழக தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தி.மு.க.வினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் கழக பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி ெபறும் சூழ்நிலையில், தி.மு.க.வினர் அராஜக வழியில் தேர்தலை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கழக நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

இதில் படுகாயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கழகத்தை சேர்ந்த உதயேந்திரம் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன், கிளை செயலாளர் பிரபு ஆகியோரை திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி, வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி. சம்பத்குமார் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலின் போது கழகத்தின் வெற்றியை தடுக்கும் வகையில் தி.மு.க.வினர் உள்ளே நுழைந்து சி.சி.டி.வி. கேமராக்களை சேதப்படுத்தி உள்ளனர்.

அதனை தடுக்க முயன்ற கழகத்தினரை தாக்கியது மட்டுமல்லாமல் காவல்துறையினரையும் சட்டையை பிடித்து தாக்கியுள்ளனர். அராஜக செயலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ஆண்டு கால கழக ஆட்சியில் இது போன்ற சம்பவங்களை குறிப்பிட்டு காட்ட முடியுமா?
தி.மு.க.வின் அராஜக செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

இது சம்பந்தமாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஓரிரு நாட்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.