சிறப்பு செய்திகள்

முதலமைச்சரின் ஆக்கப்பூர்வமான கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

சென்னை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றைக்க் கட்டுப்படுத்த, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. நோய்த்தொற்று குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்து செயல்படுத்தும் வகையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டது

தலைமைச்செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு மற்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சென்னையில் மண்டல வாரியாக அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

சென்னையில் நோய்த்தொற்றை விரைவாக கட்டுப்படுத்தும் வகையில் காய்ச்சல் முகாம்கள் அனைத்து பகுதிகளிலும் தொடங்கப்பட்டு பரிசோதனை வீடு, வீடாக நடத்தப்பட்டது. இதில் நோய்த்தொற்று உள்ளவர்கள் எளிதாக கண்டறியப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மருந்துகள் மற்றும் கபசுர குடிநீர் அடங்கிய பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உடனுக்குடன் வாங்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை 15 லட்சத்து 45 ஆயிரம் கிட்களை வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 11 லட்சத்து 51 ஆயிரம் கிட்கள் பெறப்பட்டுள்ளன. 53,516 கிட்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆகவே இதுவரை தமிழக அரசால் பெறப்பட்ட பிசிஆர் கிட்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 55 ஆயிரத்து 216. தற்போது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் இருப்பாக 4,59,800 கிட்கள் உள்ளன.

மருந்துகள் ரெமிட்டெஸ்வியர் எனும் மருந்து ரூ.42,500 மதிப்பில் தமிழ்நாடு மருந்துகள் கழகம் மூலம் கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவின்படி 60 ஆயிரம் மருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஹைபிளோ ஆக்சிஜன் நசல் கெனுலா எனும் கருவி மருத்துவ வல்லுநர்களின் கருத்துருக்கள் பெறப்பட்டு விரைவில் வாங்கப்படவுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக 17,500 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 75,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த மையங்களில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக கிண்டியில் கொரோனா சிகிச்சை மையத்தை அமைத்து துவக்கி வைத்துள்ளார்.

அதிகப்படியான பரிசோதனைகள் மேற்கொள்வது. தொற்று கண்டறியப்பட்டவர்கள் தனிமைப்படுத்துவது, ஆரோக்கியமான உணவு வழங்குதல் என பல்வேறு தனித்துவமிக்க நடவடிக்கைகள் முதலமைச்சரின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தமிழகம் முழுவதிலும் நேற்று மட்டும் 50 ஆயிரத்து 55 தனி நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 19 லட்சத்து 56 ஆயிரத்து 672 தனி நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் தினசரி 15 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை நடத்த 107 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் 54 அரசு மருத்துவமனைகளும் 53 தனியார் மருத்துவமனைகளும் அடங்கும். மையங்களில் 24 மணி நேரமும் 3 ‘ஷிப்ட்’ அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாவை கொண்டு சிகிச்சை அளிக்கும் பணிக்கு முதலமைச்சர் அனுமதி அளித்து உத்தரவிட்டதை தொடர்ந்து பலர் இதன் மூலம் குணமடைந்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாகக் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,670 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4,894 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 51,344 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் இதுபோன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையின் காரணமாகத் தொடர்ந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது காலம் கண்ட உண்மை