தற்போதைய செய்திகள்

ராதாபுரம் தொகுதி ஆமையடி கிராமத்திற்கு ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை – இன்பதுரை எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்

திருநெல்வேலி

மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது. ராதாபுரம் தொகுதி ஆமையடி கிராமத்திற்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை இன்பதுரை எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த ஆமையடி கிராமம் முழுக்க முழுக்க ஆதிதிராவிடர் வசிக்கும் கிராமம் ஆகும். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வள்ளியூர் செல்ல வேண்டுமானால் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி கஸ்தூரி ரெங்கபுரம் வழியாக கோட்டைகருங்குளம் சென்று வள்ளியூர் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

அதே நேரம் ஊரை ஒட்டிய ஆமையடிகுளம் − கொள்வாய் குளம் ஆகிய இரட்டை குளங்களுக்கு நடுவே கோட்டை கருங்குளத்தை இணைக்கும் ஒரு மண் பாதை நாடு சுதந்திரமடைந்த காலம் தொடங்கி வெகு காலமாக இருந்து வந்துள்ளது. சுமார் இரண்டரை கி.மீ நீளமுள்ள இந்த மண்பாதை வழியாக கோட்டை கருங்குளத்திற்கு எளிதில் சென்று விடலாம்.

இந்த மண்பாதையினை தார்சாலையாக மாற்றித்தர கோரி ஆமையடி மக்கள் கோரியதை தொடர்ந்து கடந்த 1972 வாக்கில் ராதாபுரம் பஞ்சாயத்து யூனியனில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி கிணற்று சரல்களை கொட்டி 48 ஆண்டுகளுக்கு முன்பாக மண்சாலை ஒன்றை அமைத்து கொடுத்திருக்கிறார்கள்.

இந்த மண்சாலையும் ஆமையடி கிராமத்திற்கு வெளியே சுமார் 500 மீட்டர் தாண்டியே அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மண்சாலையில் கோட்டை கருங்குளத்திலிருந்து வரும் இருசக்கர வாகனங்கள் ஆட்டோ போன்ற வாகனங்கள் எதுவும் ஊருக்குள் நேரடியாக வர முடியாததால் எஞ்சிய தூரத்திற்கு பொதுமக்கள் நடந்து தான் ஊருக்குள் வர முடியும். குறிப்பாக மழைக்காலங்களில் இரு குளங்களும் நிரம்பிய நேரங்களில் மக்களின் பாடு பெரும் திண்டாட்டம் தான். எனவே இந்த மண்சாலையை அரசு சீரமைத்து தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என்பது ஆமையடி கிராம மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் ஆமையடி மண்சாலையை சீரமைத்து, புதிய தார்சாலை அமைக்கும் திட்டத்திற்கு ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நேற்று அடிக்கல் நாட்டினார். புதிய தார்சாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு ஆமையடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் குடும்பமாக கலந்து கொண்டு இன்பதுரை எம்.எல்.ஏ.வுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு ராதாபுரம் ஒன்றிய கழக செயலாளர் அந்தோணி அமலராஜா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 85 வயது முதியவர் சுப்பையா என்பவர் கூறுகையில் இந்த சாலை அமைக்கப்பட வேண்டும் என்று காலம்காலமாக போராடி வந்தோம். மகப்பேறு போன்ற அவசர காலங்களிலும் கூட 10 கிலோ மீட்டர் சுற்றி காட்டுசாலை வழியாகதான் வள்ளியூருக்கு செல்ல வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது.

இந்த சாலைக்காக 50 ஆண்டு காலமாக போராடி வந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினராக இன்பதுரை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு நேரில் சென்று தார் சாலை வசதி கேட்டு மனு கொடுத்தோம். அதன் பயனாக இப்போது இந்த சாலை வந்துள்ளது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு எங்களது கிராமத்துக்கு நேரடி தார் சாலை வசதி அமைத்துத் தந்ததற்காக கிராமத்தின் சார்பாக தமிழக அரசுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.