சிறப்பு செய்திகள்

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இழுத்தடிப்பதா?

தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னை

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இழுத்தடிக்கும் தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் போக்குவரத்து பணியாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த தி.மு.க., ஆட்சியமைத்து பத்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்க வேண்டிய ஓய்வூதிய பயன்களையும், அகவிலை படியையும் கூட தராமல் இழுத்தடித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்புத்தொகை ஏதும் வழங்கப்படாத சூழ்நிலை தற்போது நிலவுவதாகவும், கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்து இயல்பு நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ள போதிலும், 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசின் வருவாயும், போக்குவரத்து கழகங்களின் வருவாயும் ஓரளவு உயர்ந்து வருகின்ற நிலையிலும், போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதிய பயன்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்து விட்டதால் ஓய்வூதிய பயன்கள் விரைவில் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் தங்கள் குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்றவற்றை கடன் வாங்கி போக்குவரத்து தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இப்போது வாங்கிய கடனுக்கான வட்டியை கூட செலுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைமைக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்னும் சிலர் ஓய்வூதிய பயன்கள் வந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு திருமணத்தை நடத்த உத்தேசித்துள்ளனர். இன்னும் சிலர் மருத்துவத்திற்கு பணமில்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோர் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. தற்போது பணியில் உள்ளவர்கள், தங்களுக்கும் நாளை இதே நிலைமை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

நியாயமாக, சட்டப்படி கொடுக்க வேண்டிய ஓய்வுகால பயன்களையும், அகவிலைப்படியையுமே அளிக்காத நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் என்ற தி.மு.க. அரசின் வாக்குறுதி கேள்விக்குறியாகி விட்டது.

இந்த வாக்குறுதி போக்குவரத்து தொழிலாளர்களின் வாக்குகளை பெறுவதற்காக என்பது தற்போது நிலைநாட்டப்பட்டு விட்டது. தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற என்ற மன நிலைக்கு போக்குவரத்து தொழிலாளர்களும், ஓய்வூதியதாரர்களும் வந்து விட்டார்கள்.

இருப்பினும், சட்டப்படி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஊதியம் ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

இதற்கான நிதி அரசு போக்குவரத்து கழகங்களில் இல்லை என்றாலும், இதற்கு தேவையான நிதியை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

எனவே முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வுகால பயன்களை உடனடியாக வழங்க ஆவன செய்திடுமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.