போலீசாரை தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசுவதை அரசு வேடிக்கை பார்ப்பதா? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை

சென்னை:
கண்ணியமிக்க காவல்துறையினரை தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசுவதை அரசு வேடிக்கை பார்ப்பதா? என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தி.மு.க.வினர் காவல்துறையினரிடம் நடந்து கொள்ளும் போக்கு வேதனைக்குரியது. புதுக்கோட்டையில் மாவட்ட கண்காணிப்பாளரை மிரட்டுகிறார்கள், அவரும் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுகிறார். மதுரையில் பெண் காவலர் முன்னிலையில் வேட்டியை அவிழ்த்து அடாவடி செய்கிறார்கள்.
‘வாய்மையே வெல்லும்’ எனும் மந்திரத்தையும், சிங்கத்தின் உருவத்தையும் தனது முத்திரையாக கொண்டுள்ள தமிழ்நாடு காவல்துறையின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கண்ணியமிக்க காவல் பணியில் இருப்பவர்களை
இப்படி தரக்குறைவாக பேசுவதை இந்த அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.