தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 33 லட்சம் முதிவர்களுக்கு உதவித்தொகை – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தகவல்

நாமக்கல்

தமிழ்நாடு முழுவதும் 33 லட்சம் முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கூறினார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் புதிய திட்டப்பணிகளின் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா கலந்துகொண்டு ஆர்.புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ.2.64 லட்சம் மதிப்பில் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 4 பேருக்கும், மாற்றுத்திறனாளி இருசக்கர வாகனம் ஒருவருக்கும், காதொலி கருவி, கைத்தாங்கி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து, ஆர்.புதுப்பாளையம் கலையரங்கம் அருகே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தப்பட்ட சாலையினையும் திறந்து வைத்தார்.

இதனையடுத்து, கட்டானாச்சம்பட்டி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா திறந்து வைத்து பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படும் வரை அங்கு சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்குத் தேவையான இணை உணவு வீடுதோறும் சென்று அங்கன்வாடி மையப் பணியாளர்களால் வழங்கப்பட்டு வருகிறது. பிறக்கும் குழந்தைகளை பராமரிக்கும் முறைகள் குறித்து வீடுகள் தோறும் சென்று அங்கன்வாடி மையப் பணியாளர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் செயல்படுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு மக்களை தேடி நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதன் ஒரு பகுதியாக இதுவரை சுமார் 30 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 33 லட்சம் பேருக்கு இந்த உதவித்தொகை மாதந்தோறும் கிடைத்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்பட்டு, உடனுக்குடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டக் கழக அவைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான பி.ஆர்.சுந்தரம், வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.பி.தாமோதரன், வெண்ணந்தூர் ஒன்றியக்குழு தலைவர் தங்கம்மாள் பிரகாசம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.