சிறப்பு செய்திகள் மற்றவை

பெண்களின் முன்னேற்றத்திற்கு கழகம் எந்நாளும் உழைக்கும் -மகளிர் தின வாழ்த்து செய்தியில் ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி

சென்னை

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள `சர்வதேச மகளிர் தின’ வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

“கடவுள் கோயிலில் சிலைகளாகவும், குடும்பத்தில் பெண்களாகவும் இருக்கிறார்’ என்றால் அதை மறுப்போர் யாரும் இருக்க முடியுமா? அன்பு அன்னையாய், ஆருயிர் மனைவியாய், அருமை மகளாய் எத்தனை வடிவில் தோன்றினாலும் பெண் என்பவள் தெய்வம் தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டனுக்கு “அம்மா’’ என்னும் தலைவியும், தெய்வமானது அரிதினும், அரிதான அருங்கொடை அல்லவா?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே “பெண்ணின் பெருந்தக்க யாவுள?’’ பெண்ணைவிட பெருமை உடையவை வேறு உண்டோ? என்று கேட்ட வள்ளுவரின் கேள்விக்கு நேற்றும், இன்றும், நாளையும் “இல்லை! பெண்ணே பெருமைக்கு உரிய இறைவனின் பெரும் படைப்பு’’ என்பது தானே விடையாக இருக்க முடியும்.

அல்லும், பகலும் உழைப்பவள் பெண்
உள்ளத்து அன்பு ததும்பி எழுபவள் பெண்
கல்லும் கனியக் கசிந்துருகி
தெய்வ கற்பனை வேண்டி தொழுபவள் பெண்

– என்று பெண்ணின் பெருமையை வியந்து போற்றிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, “மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்’’ என்றார்.

ஒவ்வொரு நிமிடமும் உழைத்து கொண்டிருக்கும் பெண், தன் பணிகளில் எதையேனும் இனி செய்வதில்லை என்றோ அல்லது சிறிது காலம் ஒத்தி வைப்பது என்றோ முடிவெடுத்தால் இந்த உலகம் எப்படி இயங்கும் என்பதை சிந்தித்து பார்த்தாலே, பெண் தான் உலகை இயக்கும் அன்னை மகா சக்தி என்பது விளங்கும்.

பெண்மையை போற்றி வணங்கவும், பெண் இன்றி உலகம் இல்லை என்பதை உணர்த்தவும், பெண்ணின் தியாக வாழ்வுக்கு வணக்கம் செலுத்தவும், ஆண்டுதோறும் மார்ச் திங்கள் 8-ம் நாள் “சர்வதேச மகளிர் தினமாக’’ கொண்டாடப்படுகிறது. இந்த புண்ணிய நாளில் மகளிர் தின நல்வாழ்த்துகளையும், வணக்கங்களையும் அனைவருக்கும் தெரிவித்து மகிழ்கிறோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெண்மையை போற்றி, வணங்கி, சிறப்பித்து, பாதுகாத்திட உருவான இயக்கம் என்பதும், தமிழ்நாட்டில் பெண்கள் வாழ்வு சிறக்க, கழக அரசுகள் நிகழ்த்திய சாதனைகளும் வரலாற்று சிறப்புக்கு உரியனவாகும்.

அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்ணுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கான தனி இடஒதுக்கீடு வழங்கியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. “தாய்க்குலமே” என அழைத்து பெண் எல்லோருக்கும் தாயானவள் என்பதை தன் திரைப்படங்கள் மூலமும், அரசியல் பணிகள் மூலமும் அனைவர் மனதிலும் ஆழ பதிய வைத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்..

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் பெண்கள் வாழ்வு மேம்பட ஆற்றிய பணிகள் ஏராளம். பெண் சிசு கொலையை தடுக்க தொட்டில் குழந்தை திட்டம், நாட்டிலேயே முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண் கல்வியை ஊக்குவிக்க ரொக்கப்பரிசு, தாலிக்கு தங்கம், மகப்பேறு நிதி உதவி, பெண்களின் பணி சுமையை எளிதாக்க மிக்சி, கிரைண்டர், இளம்பெண்களின் இன்னல் களைய விலை இல்லா சானிட்டரி நாப்கின் என்று எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார்.

அம்மா அவர்களின் நல்லாசியோடு எங்கள் தலைமையில் நடைபெற்ற கழக அரசு, பெண்களுக்கான மகப்பேறு உதவி திட்டத்தின் உதவித்தொகையை 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது.

பணிக்கு செல்லும் பெண்களுக்காக மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கியது. மகப்பேறு விடுமுறை காலத்தை ஒன்பது மாதங்களாக உயர்த்தியது. பெண்கள் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு அரசின் அனைத்து துறைகளும் முனைப்புடன் செயல்படுவதை அம்மாவின் அரசு உறுதி செய்தது.

இன்னும், எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி, சமூகத்தில் ஆணுக்கு நிகராக மட்டும் அல்ல, ஆற்றல் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்தி, பெண் எத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமோ, அத்தனை உயரத்திற்கு சென்று சீரும், சிறப்புமாக வாழ, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எந்நாளும் உழைக்கும் என்று இந்த பொன்னாளில் உறுதி அளிக்கிறோம்.

பெண்மை வாழ்க!
ஆணுக்கு பெண் நிகர் என்று கொள்வதால் இவ்வையகம்
தழைக்கும், வாழ்வு சிறக்கும்!

மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் கூறி மகிழ்கிறோம்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள `சர்வதேச மகளிர் தின’ வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.