தற்போதைய செய்திகள்

தேர்தலுக்கு தேர்தல் பொய் சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார் ஸ்டாலின் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சாடல்

திண்டுக்கல்

தேர்தலுக்கு தேர்தல் பொய் சொல்வதையே ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார் என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் திண்டுக்கல் மேற்கு பகுதி கழகம் சார்பில் திண்டுக்கல் சாத்தங்குடியில் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பகுதி கழக செயலாளர் சேசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதி முருகன் வரவேற்றார். இதில் கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரேம்குமார் ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

தேர்தல் வரப்போகிறது என்றவுடன் ஸ்டாலின். கவர்னரிடம் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறி மனு அளித்துள்ளார். இதற்கு உடனடியாக முதலமைச்சர் விரிவான விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறிய குற்றச்சாட்டில் காண்ட்ராக்ட் நடக்கவேயில்லை. அது முற்றிலும் உண்மையானதாக இல்லை அபத்தமானது என்று பதிலடி கொடுத்தார். இதேபோன்று கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்டாலின். அமைச்சர் வேலுமணி மீது குற்றம் சாட்டி பேசியுள்ளார். இக்குற்றச்சாட்டு பொய்யானது. உண்மை நிரூபணமானால் ராஜினாமா செய்ய நான் தயார். நிரூபிக்கவில்லை என்றால் ஸ்டாலின் அவரது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என அமைச்சர் வேலுமணி கேட்டதற்கு தற்போது வரை பதில் இல்லை.

ஊழலின் ஊற்றுக்கண் திமுக. இவர்கள் நம்மை பார்த்து குறை கூறுகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்வதாக ஸ்டாலின் பொதுமக்களிடம் பொய்யான வாக்குறுதியை அளித்தார். அவரால் தள்ளுபடி செய்ய முடிந்ததா? தற்போது மறுபடியும் அவரது கதையை ஆரம்பித்து உள்ளார். நீட்தேர்வை ரத்து செய்வோம் என்கிறார் ஸ்டாலின். நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரசும் திமுகவும் தான். அதனை தற்போது ரத்து செய்வோம் என்கிறார். நீட்தேர்வை ரத்து செய்வதும் கொண்டு வருவதும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. தேர்தலின் போது பொய் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் ஸ்டாலின்.

கருணாநிதி உயிரோடு இருந்தவரை ஸ்டாலினை தலைவராக அக்கட்சியினர் தேர்ந்தெடுக்கவில்லை. அவரது மறைவுக்குப்பின் இரண்டாம் இடத்தில் இருந்த அக்கட்சியின் தலைவர்களை பின்னுக்குத்தள்ளி தனக்குத்தானே தலைவராக ஸ்டாலின் முடிசூட்டிக் கொண்டார். அதேபோன்று அவரது மகன் உதயநிதி மாநில இளைஞரணி செயலாளர், கனிமொழி மகளிரணி செயலாளர் என அவர் குடும்பத்தினரே உள்ளனர். கழகத்தில் இது போன்ற நிலை இல்லை.

குழந்தை பிறந்தவுடன் தாய் சேய் நலபெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. கிராம பெண்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காக ஆடு, பசுமாடுகளை புரட்சித்தலைவி அம்மா வழங்கினார். அதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கி வருகிறார். பெண்களை தாயைப் போல பாதுகாக்கும் அரசாக கழக அரசு உள்ளது.

புரட்சித்தலைவி அம்மா பொங்கல் பரிசாக ரூ.100 வழங்கினார். தொடர்ந்து ரூ 1000 வழங்கினார். தற்போது முதல்வர் ரூ 2500ம், பொங்கல் பரிசு பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்க வேண்டும் என விவசாயியின் மகனாக இருக்கின்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த 4 3/4 வருடங்களுக்கு மேலாக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளது. கழக அரசை ஏதாவது குறை கூற முடியுமா?

திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி துவங்குவதாக திமுகவினர் அடிக்கல் நாட்டியதோடு சரி. அதற்கான இடமும் ஒதுக்கப்படவில்லை. நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஆனால், தற்போது கழக ஆட்சியில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தும், இடம் தேர்வு செய்யப்பட்டும் திண்டுக்கல் ஒத்தக்கண் பாலம் அருகே மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எல்லாம் புதிய கல்வி கட்டிடங்கள், சாலைகள், தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் வசதி உள்ளிட்ட மக்களின் அன்றாட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் என்ன செய்ய வேண்டுமோ அதனை தெய்வத்தின் அருளால் நிறைவேற்றி உள்ளேன். விடுபட்ட சில பணிகள் மட்டும் விரைவில் துவங்கும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி, பி.கே.டி.நடராஜன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர், கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன், இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன், வர்த்தகரணி செயலாளர் மீனாட்சி சுந்தரம், மாணவரணி செயலாளர் ராஜேஷ்கண்ணா, கலைப்பிரிவு செயலாளர் ரவிக்குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஆமினா ரஹீம், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, முரளி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.