உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்தில் படிப்பை தொடர நடவடிக்கை

அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்\
சென்னை
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மருத்துவ படிப்பிற்காக சென்ற மாணவ மாணவியர் தங்களுடைய மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தமிழகத்திற்கே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது போர் முடிவதற்கான அறிகுறியே தென்படவில்லை.
எனவே உக்ரைனில் மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலையில் நமது தமிழக மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர். அவர்களது இச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள்
கல்வியாளர்களை கலந்து பேசி நமது மாணவ செல்வங்கள் தமிழகத்திலேயே மருத்துவ படிப்பினை தொடர்ந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.