தற்போதைய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்தில் கூட உடன்பாடு இல்லை என்று சொன்னவர் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் க.பாண்டியராஜன் கடும் தாக்கு

அம்பத்தூர்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்தில் கூட உடன்பாடு இல்லை என்று சொன்னவர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்து சமய அறநிலைதுறைக்கு சொந்தமான திருக்கோயில்களில் உள்ள குளங்களில் குடிநீரைப் பாதுகாக்கும் வகையில் குடிமராமத்து பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் ஆவடி கோயில் பதாகையில் உள்ள பெருமாள் கோவில் குளத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆவடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து பல்வேறு குளங்கள் மீட்கப்பட்டு இன்று குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவில் பதாகை பெருமாள் கோவில் குளத்தை தூர்வாரி கரை அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ஏரிகளின் தலைநகரமாக ஆவடி திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மின்சார கட்டண வசூலிக்கும் முறையினை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மிகத்தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு நீதிமன்றமும் அதணை ஏற்றுக்கொண்டது. ஆனால் இன்று நீதிமன்ற அவமதிப்பு செய்யும் வகையில் திமுக சார்பில் தேவையற்ற வகையில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் இந்த கொரோனா காலத்தில் அரசியல் செய்கிறார்கள் மின்சாரத்தைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.

இருண்ட தமிழகத்தை ஒளிமயமாக்கியது. அம்மாவின் அரசு. 100 யூனிட் வரை இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் ஆகியவை வழங்கியது அம்மாவின் அரசு. மின்வாரியம் என்பது மக்கள் சொத்து அந்த சொத்துக்கு எந்த பங்கமும் வராமல் பாதுகாப்பது அரசின் கடமை. தமிழக அரசு தன்னுடைய சக்தியை மீறி கொரோனா தடுப்பு பணிக்கு ரூபாய் 10,000 கோடி வரை செலவு செய்துள்ளது. ஆனால் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தது மிகவும் கண்டனத்துக்குரியது.

மின்சாரத் துறையில் பல்வேறு பிரிவுகளில் குறிப்பாக டி.என்.இ.பி உட்பட பல்வேறு பிரிவுகளை உருவாக்கியது அம்மாவின் அரசு. இது மக்களுக்கான அரசு. அன்றே ஆற்காடு வீராசாமி திமுக அரசு வரும் சட்டமன்ற தேர்தலில் வீழ்ச்சி அடையும் என்றார். அதற்கு மிக முக்கிய காரணம் மின்சாரம் என்று உண்மையை எடுத்துரைத்தார். கொரோனா காலத்தில் அரசுக்கு துணை நிற்பது பல்வேறு அரசு துறைகள் தான். இன்று பார்த்தோமேயானால் கேரளா மகாராஷ்டிரா மாநிலத்தில் மின் கட்டணத்தில் சலுகை என்று எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் கேரளா, மகாராஷ்டிராவை விட தமிழ்நாட்டில் மின் கட்டணம் மிகக் குறைவு. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொரோனா ஊரடங்கு காலமான ஏப்ரல்,மே, ஜூன், இந்த மூன்று மாதத்தில் தமிழக அரசு 18 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது ஸ்டாலினுக்கு தெரியவில்லையா. திமுகவில் ஒரு கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் அப்படிப் பார்த்தோமானால் 25 லட்சம் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும். ஆனால் சுமார் 1000 பேர் கூட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தெரியவில்லை. திமுக தொண்டர்களே இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமையின் உத்தரவுகளுக்கு கட்டுப்படவில்லை. மின்சார கட்டணம் குறித்த ஆர்ப்பாட்டம் என்பது வேடிக்கையான ஆர்ப்பாட்டம்.

திருநின்றவூர் பகுதியைப் பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளாக எந்த ஒரு வீட்டிற்கும் மழைநீர் புகாதவாறு குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் கருப்பர் கூட்டம் யூடியூப் விவகாரத்தில் வெளிநாட்டில் இருக்கும் யூடியூப் சேனலின் தலைமையிடத்தில் தொடர்புகொண்டு அந்த இணையதளத்தில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்தது அம்மாவின் அரசு.

இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கூறுகின்றார்கள். அரசாங்கம் கண்டனம் தெரிவிக்க முடியாது. ஆனால் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த நடவடிக்கை எடுத்தது அம்மாவின் அரசுதான். இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என எந்த மதத்திற்கு பங்கம் வந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பாக நிற்கும் அரசு இது மதசார்பற்ற அரசு.

மேலும் அமைச்சர்கள் செங்கோட்டையன், சேவூர் ராமச்சந்திரன் உட்பட பலர் கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட இந்த கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து மதத்தின் பண்டிகைக்கும் வாழ்த்துக் கூறுவார். இந்து மதத்தின் எந்த ஒரு பண்டிகைைக்கும் வாழ்த்து கூற மாட்டார். அவரையும் மீறி திமுகவின் இணையதளத்தில் விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து என்று வந்த செய்தியை மறுக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை என்று சொன்னவர் தான் மு.க.ஸ்டாலின்.

தொடர்ந்து இந்துமதத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை திமுக எடுத்துக்கொண்டு வரும் குறிப்பாக ராமர் எந்த கல்லூரியில் படித்தார். இந்து என்றால் திருடன் என்று இந்து மதத்திற்கு எதிரான பல்வேறு கருத்துக்களை கூறுவதும் திமுக தான். ஆவடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை இதுவரை 2118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 48 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை விட குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது.

தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட காய்ச்சல் கண்டறியும் முகாம் 400க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீர் வழங்கி காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் சென்னை போன்று ஆவடி கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மீளும்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி, மாநகராட்சி கமிஷனர் சத்தியநாராயணன், ஆவடி நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்