சிறப்பு செய்திகள்

4 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி – பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒருங்கிணைப்பாளர்கள் வாழ்த்து

சென்னை

4 மாநில தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று மக்களின் இதயங்களை வென்றதற்காக தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் பாரதிய ஜனதா கட்சியின் நல்லாட்சி மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இது வளர்ச்சிக்கான குறியீடாகும். தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இணை ஒருங்கிணைப்பாளர்

இதேபோல் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க.வின் மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்த பாரத பிரதமருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நான்கு மாநிலங்களில் பதவியேற்கவுள்ள புதிய முதலமைச்சர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.