தற்போதைய செய்திகள்

கொரோனாவை எதிர்க்கும் மருந்தாக மக்களுக்கு மன தைரியத்தை கொடுப்பது எடப்பாடியார் ஆட்சி – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

விருதுநகர்

கொரோனாவுக்கு மன தைரியம் தான் மருந்து. அந்த மன தைரியத்தை கொடுக்கும் ஒரு ஆட்சியாகத் தான் எடப்பாடியார் ஆட்சி இருக்கிறது என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் நிதி மற்றும் ஒன்றிய பொது நிதி மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ரூ.3.கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டம், ஒன்றிய பொது நிதி மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். அதன்படி நேற்றுமுன்தினம் பள்ளபட்டி ஊராட்சி மற்றும் நாரணாபுரம் ஊராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) சுக்கிரவார்பட்டியில் அங்கன்வாடி கட்டிடம், கட்டசின்னம்பட்டி, சிலோன்காலனியில் நியாயவிலைக்கடை, ஆனையூர் ஊராட்சி அய்யம்பட்டியில் நியாயவிலை கடை, ஊராம்பட்டியில் அங்கன்வாடி கட்டிடம், ஊராம்பட்டி காலனியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி,. ஏ..துலுக்கபட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பூலாவூரணி சன்னாசிபட்டியில் அங்கன்வாடி கட்டிடம், சித்துராஜபுரம் அய்யனார் காலனி, சித்துராஜபுரம் கீழூர் விஸ்வநத்தம் ஊராட்சி சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் நியாயவிலைக்கடை, முனீஸ்வரர் காலனியில் சுகாதார வளாகம் ஆகிய பணிகளை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசுக்கு ஸ்டாலின் கொடுக்கும் அறிவுரைகள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக இருந்தால் முதல்வர் ஏற்றுக் கொள்வார். தமிழக அரசுக்கு ஸ்டாலின் கொடுக்கும் அறிக்கைகள் அனைத்துமே அக்கப்போராகத்தான் உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டுவது குறை கூறுபவர்கள் குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள் என்பது போல் உள்ளது.

கொரோனா தொற்று காலத்திலும் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு , மின்சாரத்தடை, உணவு போன்ற அத்தியவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் மக்களுக்கு இல்லை. சாத்தான்குளம் பிரச்சனையில் தவறு செய்தவரை காப்பாற்றும் முயற்சியை முதல்வர் ஒருபோதும் எடுக்க மாட்டார். அதனால் தான் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் யாரும் கிராமப் பகுதிகளுக்குள் செல்லவில்லை என்றால் மக்களிடம் பயம் வந்துவிடும். அதனால் தான் நாங்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்கள் பணியாற்றுகின்றோம்.

கொரோனாவுக்கு மன தைரியம் தான் மருந்து. அந்த மன தைரியத்தை கொடுக்கும் ஒரு ஆட்சியாகத் தான் எடப்பாடியார் ஆட்சி இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை எப்போதும் தடுப்பது கிடையாது. அவர்கள் அனைவருமே அவர்களது பணியைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.