தற்போதைய செய்திகள்

தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்டுங்கள் – அமைச்சர் செல்லூர் கே ராஜூ தெருமுனை பிரச்சாரம்

மதுரை

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மதுரை மாநகர் மாவட்டம் 72-வது வட்ட கழகம் சார்பில் கழக மாணவரணி இணைசெயலாளர் பா.குமார் தலைமையில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சிறப்புரை ஆற்றினார். மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, மாவட்ட கழக துணைச் செயலாளர் தங்கம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், பகுதி கழக செயலாளர் வி.கே.எஸ்.மாரிச்சாமி மற்றும் ஜோசப் தனுஷ்லால், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தெருமுனை பிரச்சாரத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

இன்றைக்கு கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மக்களுக்கு கழக அரசு செய்த சாதனை திட்டங்களை சொல்ல ஒரு நாள் போதாது. நாள் முழுதும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் பல்வேறு அவதூறு பிரச்சாரங்கள் செய்கிறார். இதே கடந்த திமுக ஆட்சி காலத்தில் இந்த மதுரைக்கு என்ன நன்மை செய்தார் என்று அவரால் கூற முடியுமா?

ஸ்டாலின் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். இதே திமுக ஆட்சிக்காலத்தில் அவர் துணை முதலமைச்சர் இருந்தபொழுது இதுபோன்று கிராம சபை கூட்டத்தை கூட்டினாரா? ஆட்சிக்கு வராமலே ஆட்சிக்கு வந்தது போல் கற்பனை செய்து கொண்டு உருட்டல் மிரட்டலுடன் பேசி வருகிறார் ஸ்டாலின்.

இப்பிரச்சாரத்தின் வாயிலாக ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். ஒரு ஸ்டாலின் என்ன ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் இந்த இயக்கத்தில் உள்ள ஒரு தொண்டனை கூட தொட்டு பார்க்க முடியாது. இன்றைக்கு முதலமைச்சரின் அயராத உழைப்பால் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இதே திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்று இருந்ததா,?

பொதுமக்களாகிய நீங்கள் கழக அரசின் சாதனைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு வாக்களித்து கழகத்தை எதிர்த்து நிற்கும் திமுகவிற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.