தற்போதைய செய்திகள்

பணி முடிவடையும் முன்பே சாலை திறப்பு – தி.மு.க. எம்.பி. கவுதம சிகாமணிக்கு ஏற்காடு கழக எம்.எல்.ஏ. கண்டனம்

சேலம்

பணி முடிவடையும் முன்பே சாலையை திறந்து வைத்த கள்ளக்குறிச்சி தி.மு.க. எம்.பி. கவுதம சிகாமணிக்கு ஏற்காடு கழக எம்.எல்.ஏ. சித்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மஞ்சகுட்டை பஞ்சாயத்து ஆம்பூர் கிராமத்திலிருந்து செம்மடுவு வரை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கழக ஆட்சியின் போது அடிக்கல் நாட்டி சாலை பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கவுதம சிகாமணி ஏற்காட்டில் நடைபெற்ற வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். அப்போது அவர் ணி நிறைவடையாமல் இருந்த ஏற்காடு சாலையை தி.மு.க.வினர் ஏற்பாட்டில் அவசர கதியில் திறந்து வைத்தார். ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்காமலேயே சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏற்காடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. அரசின் 10 மாத கால சாதனை என்னவென்றால் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் செய்த திட்டங்களை தி.மு.க.வினர் தாங்கள் செய்தது போல் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் முறையாக சாலையை திறந்து வைத்தால் சட்டமன்ற உறுப்பினரான என்னை அழைக்க வேண்டும். அதனால் தான் என்னையும் அழைக்கவில்லை, அரசு அதிகாரிகளையும் அழைக்கவில்லை. இது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு ஏற்காடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா கூறினார்.

பேட்டியின்போது ஏற்காடு ஒன்றிய மாணவரணி செயலாளர் புகழேந்தி, ஏற்காடு முன்னாள் துணை சேர்மன் சுரேஷ், கிளை செயலாளர்கள் பட்டாசு பாலு, குணசேகரன், மாயவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.