தற்போதைய செய்திகள்

தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு கழகம் என்றும் உறுதுணையாக இருக்கும்

முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதி

திருவண்ணாமலை,

தி.மு.க. அரசின் பொய் வழக்குகளால் கடும் சோதனைகளை சந்தித்து வரும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு கழகம் என்றும் உறுதுணையாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதி அளித்துள்ளார்.

வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருவண்ணாமலை வேங்க்காலில் உள்ள தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி பி.சதீஷ்குமார் தலைமை வகித்தார். மண்டல செயலாளர்கள் சிங்கை ஜி.ராமச்சந்திரன், வி.வி.ஆர்.ராஜ்சத்யன், கோவை சத்யன் பி.வினுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இக்கூட்டத்தை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-

கழகம் இன்று ஆட்சி அதிகாரத்தில் இல்லை. புரட்சித்தலைவி அம்மா மறைவுக்கு பின்னர் முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் நான்கரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்து மக்கள் விரும்புகின்ற நல்லாட்சியை கொடுத்தார்.

எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் தேர்தல் நேரத்தில் கொண்டு சென்று சிறப்பான பணியை செய்தவர்கள் நீங்கள். இதனை நன்றியோடு நினைவு கூற கடமைப்பட்டு இருக்கிறேன். இந்த இயக்கத்திற்காக உழைத்த நீங்கள் ஆட்சி மாற்றத்தின்போது தி.மு.க. அரசால் கடுமையான சோதனைகளை அனுபவித்து வருகிறீர்கள்.

பல்வேறு இடங்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது குறிப்பாக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட துணை செயலாளர்கள் மீது ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற தி.மு.க. அரசு பொய் வழக்கு போட்டு பழிவாங்குகிறது என்பது அனைத்து தரப்பினருக்கும் தெரியும்.

அந்த நேரத்தில் உங்களுக்காக உங்களின் உழைப்பிற்காக குரல் கொடுத்தவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கழக தலைமை என்றும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பேசினார்.

இக்கலந்தாய்வில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ,
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சரும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.