சிறப்பு செய்திகள்

பிரதமர் மோடிக்கு ஒருங்கிணைப்பாளர் பாராட்டு – அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்டதற்கு கழகம் சார்பில் நன்றி கடிதம்

சென்னை

பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தங்களின் தலைமையின் கீழ் உள்ள மத்திய அரசு, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து அனைத்து இந்திய மாணவர்களையும் பத்திரமாக மீட்டது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச மாணவர்களையும் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்க நடவடிக்கை எடுத்ததை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் ஒத்துழைப்போடு மனிதாபிமான முறையில் மோதல் பகுதியில் சிக்கிய இந்திய மாணவர்களை பாதுகாப்பாக மீட்டது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது வெளிநாடுகளுடன் உள்ள உறவில் தங்களின் ராஜதந்திரம் மற்றும் நல்லுறவின் அடையாளத்தை காட்டுகிறது.

உக்ரைனில் இருந்து அனைத்து இந்தியர்களையும் மீட்க மத்திய அரசு எடுத்த விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.