சிறப்பு செய்திகள்

கழக மாநிலங்களவை எம்.பி.க்கள் பதவி ஏற்பு

புதுடெல்லி

தமிழகத்தைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் உள்பட மாநிலங்களவைக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் 20 மாநிலங்களில் இருந்து 61 பேர் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்களில் கழகத்தை சேர்ந்த கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜி.கே வாசனும் பதவியேற்றுக் கொண்டனர். மூன்று பேரும் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.

பதவி ஏற்றபின் டெல்லியில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு த.மா.கா. சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்கள் பணியில் என்னோடு பயணிக்கும் த.மா.கா. தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் உளமார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த உறுதியாக செயல்படுவேன். மத்தியில் நிலுவையில் உள்ள மாநிலத் திட்டங்களை விரைவுபடுத்தி தாமதமின்றி தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். ராஜ்யசபையில் தமிழக வளர்ச்சிக்கு தமிழக மக்களின் குரலாக ஒலிப்பேன் என்று தெரிவித்தார்.