தற்போதைய செய்திகள்

கழகத்தின் வெற்றியை தி.மு.க. தட்டி பறிப்பு – முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு

தருமபுரி

கழகத்தின் வெற்றியை தி.மு.க. தட்டிப் பறித்து விட்டதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

தருமபுரி மாவட்ட கழகம், காரிமங்கலம் ஒன்றியம் காரிமங்கலம் பேரூர் கழகம் இணைந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவை பிப்ரவரி 14-ந்தேதி முதல் ஒரு மாதம் கொண்டாடி வருகிறது.

அதன்படி நேற்று காரிமங்கலம் ராமசாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-

50 ஆண்டுகால கழக வரலாற்றில் தி.மு.க. பலமுறை கழகத்திடம் தோல்வியை கண்டுள்ளது. 1991 சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி மட்டும் தான் ஜெயித்தார். 2011 தேர்தலில் கழகம் 146 இடங்களை பெற்றது. தி.மு.க. வெறும் 23 இடங்களை தான் பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட அன்றைக்கு தி.மு.க. பெறவில்லை.

இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. 2016 தேர்தலில் கூட தனித்து நின்று கழகம் வெற்றி பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலில் கழகத்துக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு தி.மு.க. வெற்றி பெற்று விட்டது.

தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியின் ஆள் பலம், அதிகார பலம் மற்றும் அதிகார பலம் ஆகியவற்றை எதிர்த்து கழக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் பல்வேறு இடங்களில் கழகத்தின் வெற்றியை தி.மு.க. தட்டி பறித்துள்ளது.

இருப்பினும் பல்வேறு இடங்களில் தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க. பெற்ற வெற்றி நிரந்தரமல்ல. அதேபோல் கழகத்தின் தோல்வி நிரந்தரம் அல்ல. ஆனால் கழகத்திற்கு எதிர்காலம் இல்லை என்று சிலர் பேசி வருகின்றனர்.

தி.மு.க.வுக்கு மூக்கணாங்கயிறு தேவைப்படும் போது நிச்சயம் கழகத்திற்கு மக்கள் வாக்களிப்பார்கள். தொடர்ந்து கழகம் மக்கள் பணியாற்றும். தோல்வியை கண்டு நாங்கள் துவள மாட்டோம். நிச்சயம் வருகின்ற தேர்தல் காலங்களில் கழகம் வெற்றி பெறும். அந்த சூழ்நிலையை மக்களை உருவாக்குவார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.