முதியோர் உதவித்தொகை நிறுத்தம்: தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை
விடியா தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படுவதாகவும், தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய வாகைக்குளம் கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாடகமேடையை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சுடுகாடு சுற்றுச்சுவர், பாலம், நியாயவிலை கடை ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
கடந்த ஆட்சியில் திருமங்கலம் தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாக சென்று முதியோர் உதவித்தொகை வழங்கினோம்.
இன்று நிறைய கிராமங்களில் முதியோர் உதவித்தொகையை நிறுத்தி விட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது தரமற்ற ரேஷன் அரிசி வழங்குகிறார்கள்.
எனவே தரமான ரேஷன் அரிசி வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். வருகிற 18-ந்தேதி சட்டபேரவை கூடுகிறது. மக்களின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்து பெற்று தருவதில் முனைப்பு காட்டுவோம்.
பறிக்கப்பட்டுள்ள முதியோர் உதவி தொகையை அரசிடம் போராடி பெற்று தருவோம். மாநிலம் முழுவதும் முதியோர் உதவித்தொகை தகுதி உள்ளவர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும். இல்லைவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் மின்னல்கொடி ஆண்டிச்சாமி, பொன்னமங்கலம் பஞ்சாயத்து தலைவர் ஜெயராஜ், நகர அம்மா பேரவை செயலாளர் பாண்டி மற்றும் ஜெயமணி, சிவபாண்டி, வாகைகுளம் சிவசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.