தற்போதைய செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பினை சிரமமின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை அமைச்சர் – உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்

திருப்பூர்

பொங்கல் பரிசு தொகுப்பினை சிரமமின்றி பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சோமவாரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கி பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள 2.10 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5604.84 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், தாராபுரம், உடுமலைபேட்டைமற்றும் மடத்துக்குளம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த சுமார் 7,48,666 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர் களுக்கு ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு ரூ.199.65 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு அளிக்கின்ற பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை பெற்றுக்கொண்டு பொங்கல் திருநாளை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும். சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை எவ்வித சிரமமின்றி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து, பெரியபட்டி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, குடிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, உடுமலைபேட்டை தேஜஸ் மஹால் திருமண மண்டபம் மற்றும் பொரியகோட்டை ஊராட்சி காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசுகள் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளையும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமுர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன் சங்கர்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் நர்மதா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ், மாவட்ட ஆவின் சங்க தலைவர் கே.மனோகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாண்டியன், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுகந்தி, முரளி, துணைத்தலைவர் புஷ்பராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.