தற்போதைய செய்திகள்

நாமக்கல் மாவட்ட ஏரிகளிலும் மேட்டூர் உபரி நீர் நிரப்ப நடவடிக்கை – அமைச்சர் பி.தங்கமணி உறுதி

நாமக்கல்

மேட்டூர் அணை உபரி நீரை நாமக்கல் மாவட்ட ஏரிகளிலும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட சாணார்பாளையம், ராஜாகவுண்டம்பாளையம், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பிலிக்கல்பாளையம், நாமக்கல் பகுதி நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி வழங்கினார். மேலும் பள்ளிபாளையம் வட்டாரம், தட்டாங்குட்டை ஊராட்சியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவித்திட்ட காசோலைகளை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 83,174 குடும்ப அட்டைதாரர்களுக்கும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 83,161 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் 84,133 அட்டைதாரர்களுக்கும், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 99,690 அட்டைதாரர்களுக்கும், ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 86,388 அட்டைதாரர்களுக்கும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 86,735 அட்டைதாரர்களுக்கும் சேர்த்து நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5,23,281 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையின் உபரிநீரை ஏரிகளில் தேக்கி வைக்க முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ரூ.500 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து மேட்டூர் உபரிநீரை நாமக்கல் மாவட்ட ஏரிகளிலும் நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருச்செங்கோடு நகராட்சி குடிநீர் திட்டம், திருச்செங்கோடு பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் இரண்டு மாதங்களுக்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.