தற்போதைய செய்திகள்

ஸ்டாலின் கூறும் பொய் குற்றச்சாட்டுகள் மக்களிடம் எடுபடாது – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி

ஈரோடு

திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வரும் பொய் குற்றச்சாட்டுகள் தமிழக மக்களிடம் எடுபடாது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி கவுந்தப்பாடி ஊராட்சியில் நோய்த்தொற்றை கண்டறியும் நடமாடும் மருத்துவ முகாமை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக மக்களை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து காக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கூட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 50 சதவீதம் பேர் மின்கட்டணம் செலுத்தாத அளவிற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியில் மின்வெட்டால் தமிழக மக்கள் கடும் அவதிக்குள்ளானர்.

கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள நிலையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளினால் மக்களிடம் ஏற்பட்டு வரும் நற்பெயரை போராட்டம் என்ற பெயரில் திசை திருப்ப நினைக்கிறார் மு.க.ஸ்டாலின். அவர் கூறி வரும் பொய் குற்றச்சாட்டுகள் தமிழக மக்களிடம் எடுபடாது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவாதங்கமணி, துணைத்தலைவர் தீபிகா, அய்யம்பாளையம் சரவணன், மணி சந்தோஷ் பரமசிவம், கூட்டுறவு சங்க தலைவர் தனலட்சுமி, எம்.எம்.சோமு, ஈஞ்சரம் சேகர், விஜயலட்சுமி, கே.என்.ஆறுமுகம், விஸ்வநாதன், ராசு (எ) மோகனசுந்தரம், மருத்துவர் தனலட்சமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.