தற்போதைய செய்திகள்

கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

கொரோனாவால் உயிரிழந்தவர்களுடைய எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சிந்தாதிரிப்பேட்டையில் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நோய் தொற்று என்பது நோய் எதிர்ப்பு இல்லாத நிலையில் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை நாம் கண்டறிந்து நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு, மாநகராட்சி மூலமாக மாத்திரைகள், கபசுர குடிநீர், வழங்கப்படுகிறது. காற்றில் வேகமாக பரவக்கூடிய பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதால் முக கவசம், கைகளை கழுவுதல் போன்ற பிரச்சாரங்களை தொடர்ந்து செய்து வருவதால், சென்னையை பொறுத்தவரையில் நோய் தொற்று ஜூரோவுக்கு வரும் நிலை விரைவில் ஏற்படும்.

முதல்வர் உத்தரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் நோய்த்தொற்று தாக்கம் குறைந்து வருகிறது என்பது நல்ல செய்தி வந்துக்கொண்டிருக்கிறது, கடந்த 1 ம்தேதி முதல் 12 ம்தேதி வரை ராயபுரம் பகுதியில் 123 பேர் தான் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதற்கு பின்னர் 13 ம்தேதி முதல் 22 ம்தேதி வரை நோய்த்தொற்று எண்ணிக்கை 66 ஆக குறைந்திருக்கிறது.சென்னை என்றாலே பயம் கொண்டிருந்த நிலையில் தற்போது நோய் தொற்று வேகமாக குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம். தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டதால், மாநிலத்திலேயே அதிகளவில் தொற்று பாதிக்கப்பட்டிருந்த ராயபுரம் மண்டலத்தில் தற்போது படிப்படியாக தொற்று குறைந்து வருகிறது.

சவாலை முறியடிக்கும் வகையில், முதலமைச்சர் உத்தரவின் படி, ராயபுரம் மண்டலம், தண்டையார்பேட்டை மண்டலம், இதுபோல சென்னையில் உள்ள 18 மண்டலங்களிலும் அமைச்சர்கள் குழு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிகாரிகள் குழு போடப்பட்டு அவர்களும் அவர்களுடைய பணியை செய்து வருகிறார்கள்.

அமைச்சர்கள் குழுவினர் களத்திற்கு சென்று பணிகளை முடுக்கி விட்டதால் நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. உதாரணமாக ராயபுரம் என்றபோது அனைவரும் பயந்தார்கள். ஆனால் தற்போது அப்படியே தாக்கம் குறைந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுடைய எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. ஒருவர் உயிரிழந்த பிறகு அவர் எதனால் இறந்தார் என்று கண்டறிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த நடைமுறையின் காரணமாக சில மரணங்கள் விடுபட்டு விட்டன. அதனையும் சேர்த்து அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று பயணம் மேற்கொண்டாரா? இல்லையா என்று சென்னை மாநகராட்சி பதிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வுக்குப் பின்னர் அவரது பயணம் குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கப்படும். பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணி சுமூகமாகவே இருக்கிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கூறும் கருத்து அவர்களின் தனிப்பட்ட கருத்தாகவே இருக்கும். அதனால் கூட்டணியில் எந்த இடையூறும் இல்லை. இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஒருபோதும் அதிமுக செயல்படாது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.