சோதனையில் ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை
முதலமைச்சர் தூண்டுதலின் பேரிலேயே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தியதாகவும், சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வீட்டில் நேற்று முன்தினம் தி.மு.க. அரசின் தூண்டுதலின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீண்டும் சோதனை நடத்தினர். சோதனை முடிந்த பின்னர் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய, புரட்சித்தலைவி அம்மா வளர்த்த இயக்கமான கழகம் தமிழகத்தில் ஆட்சியை தொடர முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நாங்கள் உறுதுணையாக இருந்தோம்.
கழகத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது தி.மு.க. வழக்குகளை போட்டு அச்சுறுத்துகிறது. எங்கள் மீது வழக்குகள் பாய்கிறது. குறுக்கு வழியில் அப்போது ஆட்சிக்கு வர தி.மு.க. நினைத்தது. ஆனால் நாங்கள் கழக ஆட்சி தொடர உறுதுணையாக இருந்தோம். இதனால் கழக ஆட்சி நீடிக்க முடிந்தது.
மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் முழுமையாக வெற்றி பெற்றோம். இதனால் எங்கள் மீது தி.மு.க.வுக்கு கோபம் ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டோம். ஆனால் முறைகேடுகளில் ஈடுபட்டு தி.மு.க. வெற்றி பெற்றது. சி.பி.ஐ. விசாரித்தால் அவர்கள் பெற்ற வெற்றி எப்படிப்பட்டது என தெரிந்து விடும்.
கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 70 பேர் மட்டுமே உள்ள நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கொரோனோ நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நேரமான 5 மணி முதல் 6 மணி வரை சுமார் 85 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கோவை மாவட்ட மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டிய சூழ்நிலையே இல்லை.
50 ஆண்டு கால வளர்ச்சியை நாங்கள் தந்துள்ளோம். ஆகவே உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெறும் சூழ்நிலை இருந்தது. கோவை மாவட்ட மக்கள் பெரும்பான்மையாக கழகத்திற்கு தான் வாக்களித்தனர்.
என்ன செய்தாலும் கோவை மாவட்ட மக்கள் கழகத்திற்கு ஆதரவாக உள்ளனர் என்பதை தெரிந்து கொண்டு என் மீதும், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மீதும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது தான் அனைவருக்கும் பொதுவானவர் என்று கூறினாலும் அவரது நடவடிக்கை எங்களை பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான் உள்ளது. இந்த சோதனையை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். எந்த தேர்தல் வாக்குறுதிகளையோ, எந்த திட்டங்களையோ நிறைவேற்றாத தி.மு.க. முழுக்க முழுக்க எங்களை பழிவாங்கும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறது.
காவல்துறையை பொறுத்தவரை ஒரு ஏவுகணை தான். அவர்கள் ஏவி விடுவார்கள். காவல்துறையினர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். ஆளும் அரசால் உங்களை வேறு என்ன செய்துவிட முடியும். வேறு இடத்திற்கு தானே மாற்ற முடியும்.
ஆகவே காவல்துறையினர் தி.மு.மு.க.வுக்கு அடிபணியாது செயல்பட வேண்டும். சோதனையில் என்னுடைய வீட்டில் ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை.
முழுமையான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் மீண்டும் என்னுடைய வீடு, எனது சகோதரர் வீடு சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என திமுகவை எதிர்த்து தேர்தலில் பணியாற்றியவர்கள் வீடுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
எனது வீட்டில் கடந்த முறை நடைபெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த முறையும் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் சில ஊடகங்கள் தவறாக செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஒரு ரூபாய் கூட கைப்பற்றவில்லை என சோதனை நடத்திய அதிகாரிகள் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர்.
தி.மு.க.வை பொறுத்தவரை எங்களது பணிகளை முடக்க சோதனை என்ற பெயரில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நாங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். பழிவாங்கும் இதுபோன்ற சோதனையை சட்டரீதியாக சந்திப்போம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கூறினார்.