தற்போதைய செய்திகள்

நலத்திட்டம் தொடர்ந்து கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெருமுனை பிரச்சாரம்

மதுரை

நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெருமுனை பிரச்சாரம் செய்தார்.

மதுரை மாநகர் மாவட்டம் 7-வது வட்ட கழகம் சார்பில் அம்மா அரசின் சாதனைகளை விளக்கி மாபெரும் தெருமுனை பிரச்சாரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெ.மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. பகுதி கழக செயலாளர் ஜெயவேல் மற்றும் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே ராஜூ பேசியதாவது:-

தெருமுனை பிரச்சாரத்தில் வாயிலாக அம்மா அரசின் சாதனை திட்டங்களை நாங்கள் மக்களுக்கு தைரியமாக எடுத்துக் கூறுகிறோம். ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் அவர்கள் செய்த சாதனை திட்டங்களை இதுபோன்று கூறியது உண்டா? குடும்ப ஆட்சிதான் நடத்தினார்கள். மக்கள் ஆட்சி நடத்தவில்லை.

கடந்த நான்கரை ஆண்டுகளில் 40 ஆண்டு கால சாதனை திட்டங்களை முதலமைச்சர் படைத்துள்ளார். மதுரையில் அம்மாவின் கனவு திட்டங்களான எய்ம்ஸ் மருத்துவமனை, ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் திட்டப்பணிகள், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள், வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் மற்றும் ரூ.1295 கோடியில் குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் 7 முறை உணவு தானிய உற்பத்தியில் 100 லட்சம் மெட்ரிக் டன்களை கடந்தும் மத்திய அரசின் உயரிய விருதான கிருஷி கர்மன் விருது ஐந்து முறை பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் தான். நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புக்குள்ளான வேளாண் பெருமக்களை காக்கும் வண்ணம் 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி முதலமைச்சர் சாதனை படைத்தள்ளார். இன்றைக்கு இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி சிறப்புமிகு ஆட்சி நடத்திவரும் அம்மா அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை வழங்கிட நீங்கள் நற்சான்று அளிக்கும் வகையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.