தற்போதைய செய்திகள்

தமிழகத்தை ஆள ஸ்டாலினுக்கு தகுதியும் திறமையும் இல்லை – அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு

தருமபுரி

தமிழகத்தை ஆள ஸ்டாலினுக்கு தகுதியும் திறமையும் இல்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் பேளாரஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட வேலாவள்ளி, எருமம்பட்டி, சித்திரப் பட்டி, மல்லசமுத்திரம், செம்மநத்தம், தொட்டம்பட்டி, காவாப்பட்டி, புதூர் மாரியம்மன் கோவில், பூவன் கொட்டாய், கருப்பாகொட்டாய், சவுரி கொட்டாய், கொட்டாய் பள்ளம், சேர்மன் கொட்டாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் ராதாமாரியப்பன் தலைமையில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தருமபுரி மாவட்ட கழக செயலாளரும் உயர் கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். கழகத்தில் இணைந்த ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் கழக கரை போட்ட வேட்டி, சேலை வழங்கி சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டது.

இவ்விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தமிழகத்தில் அம்மாவின் வழியில் ஆட்சியையும் கட்சியையும் இருபெரும் தலைவர்கள் சிறப்பாக வழிநடத்தி செல்கின்றனர். கழக ஆட்சியில் தான் அதிக தொழில் முதலீட்டை ஈட்டும் மாநிலமாக தமிழகம் உள்ளது. புதுப்புது தொழில்களை தமிழகத்துக்கு கொண்டு வரும் அரசாக கழக அரசு விளங்குகிறது, ரூ.3 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

புரட்சி தலைவி அம்மா அவர்கள் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க ரூபாய் 3000 கோடி ஒதுக்கியிருந்தார். இத்திட்டம் தமிழகத்தில் விவசாய பெருமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக தொடர்ந்து விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்குவதற்கு தற்போது தமிழக அரசு ரூபாய் 10 ஆயிரம் கோடியாக அதிகரித்து ஒதுக்கியுள்ளது.

கழக அரசு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கி உள்ளது. திமுக அதனை தடுக்க நினைக்கிறது. மக்கள் அவர்களை முறியடிப்பார்கள். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழகத்தை ஆள தகுதியும் இல்லை திறமையும் இல்லை.பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியது போல் தற்போது புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகிறார்கள் ஆகவே வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.