மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்? பேரவையில் எதிர்கட்சி தலைவர் கேள்வி.

சென்னை
மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என்று பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவேரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த
அரசினர் தனி தீர்மானத்தின் மீது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க கழக ஆட்சியில் ஏற்கனவே 2 முறை தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
20 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாக திகழும் காவிரியில் நமக்குள்ள உரிமையை பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.
நீர் வளத்துறை அமைச்சர் பேசும்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நானும் இந்த நேரத்தில் எனது ஆதங்கத்தை குறிப்பிட வேண்டியுள்ளது. மக்கள் இன்றைக்கு பீதியில் இருக்கிறார்கள்.
நான் யாரையும் இங்கு குறை சொல்லி பேச விரும்பவில்லை. நமக்கு கிடைத்த வாய்ப்பு, அதிலும் தி.மு.க.வுக்கு கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசில் தி.மு.க. பங்கு பெற்றது. காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சி அமைத்த நேரத்தில் அமைச்சரவையில் தி.மு.க. பங்கு வகித்தது.
உங்களுடைய ஆட்சியிலும் நடவடிக்கை எடுத்தீர்கள், எங்கள் ஆட்சியிலும் நடவடிக்கை எடுத்தோம். காங்கிரஸ் வந்தாலும், பா.ஜ.க. வந்தாலும் நமக்கு செய்யவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போது உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி காவேரி பிரச்சினையை தீர்த்து இருக்கலாம். நாங்கள் இந்த பிரச்சினை தொடர்பாக 20 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம்.
இவ்வாறு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.