தற்போதைய செய்திகள்

சந்தர்ப்பவாத கும்பலுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் – அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் வேண்டுகோள்

மதுரை

சந்தர்ப்பவாத கும்பலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள செக்கானூரணியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி பேசியதாவது:-

மக்களுக்கு திட்டங்களை நாள் தோறும் வழங்கி வரும் ஒரே அரசு அம்மாவின் அரசாகும். இந்தியாவில் எந்த முதலமைச்சரும் செய்திடாத வகையில் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாடிட 2,500 ரூபாய் பொங்கல் பரிசு மற்றும் அரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், முழு நீள கரும்பு ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.

இந்த பொங்கல் அம்மாவின் பொங்கல். இந்த திட்டத்தை பற்றி சிலர் விமர்சனம் செய்கின்றனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதன் முதலில் பொங்கல் பரிசாக 100 ரூபாய் வழங்கினார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் காலத்துக்கு ஏற்ப கடந்த ஆண்டில் 1000 ரூபாயாக வழங்கினார். தற்போது கொரோனா காலத்திலும் மக்களின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு 2,500 ரூபாய் முதலமைச்சர் வழங்குகிறார்.

அரசியல் விளம்பரம் தேடிக் கொள்ள கிராமசபை கூட்டம் என்ற பெயரில் பல்வேறு பொய் பிரச்சாரங்களை ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். வருகின்ற 9-ந் தேதி இங்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் கடந்த 2006 தேர்தல் அறிக்கையில் இரண்டு ஏக்கர் நிலம் தருவீர்கள் என்று கூறினீர்களே? ஒரு காணி நிலம் கூட கொடுத்தீர்களா என்று நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.

இன்றைக்கு அம்மாவின் அரசு வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச பட்டா வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாது அம்மா அறிவித்த தேர்தல் அறிக்கைகளில் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை கூறுவார்கள். மக்களை பொய் சொல்லி ஏமாற்றும் வகையில் பீகாரை சேர்ந்த ஒருவர் தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறார். அதில் வீட்டுக்கு வீடு தங்க காசு தருவோம் என்று கூறுவார்கள். அந்த கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை கூறி உங்களை ஏமாற்ற நினைப்பார்கள். மக்கள் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போது பல்வேறு தேர்தல் அறிக்கை கொடுத்தார்கள். அதில் ஏதாவது ஒன்றையாவது நிறைவேற்ற முடிந்ததா? ஆகவே திமுக தேர்தல் அறிக்கை என்பது வெத்து வேட்டு அறிக்கை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் கொண்டு வரும்போது மக்கள் நலனை பற்றி எண்ணி பாராமல் அதை விமர்சனம் செய்வதே திமுகவின் வழக்கமாக உள்ளது. இந்த சந்தர்ப்பவாத கும்பலுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.