தற்போதைய செய்திகள்

கருணாநிதி போல் ஸ்டாலினும் மக்களை ஏமாற்ற பார்க்கிறார் – அமைச்சர் சி.வி.சண்முகம் சாடல்

விழுப்புரம்

கவர்ச்சிகரமான பொய்யான திட்டங்களை அறிவித்து கருணாநிதியை போன்று ஸ்டாலினும் மக்களை ஏமாற்ற பார்க்கிறார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய கழகம் சார்பில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் காணையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், காணை மேற்கு ஒன்றிய செயலாளருமான முத்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். காணை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் பேசியதாவது:-

அம்மா மறைவிற்கு பிறகு இந்த இயக்கம் இருக்குமா? இருக்காதா? இந்த ஆட்சி நிலைக்குமா? நிலைக்காதா? என்று பிறர் நினைத்த நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தை சிறந்த மாநிலமாக்கியதோடு சிறந்த நிர்வாகமும் செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடியார். கடந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சோதனைகளையும் தாண்டி ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கருணாநிதியை போன்றே அவரது மகன் மு.க.ஸ்டாலின் மக்களின் ஏழ்மையை, இயலாமையை பயன்படுத்தி கவர்ச்சிகரமான பொய்யான திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தோல்வியை சந்தித்தபோது கழகத்தின் சரித்திரம் முடிந்தது என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் அதன்பிறகு நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வெற்றி கழகத்திற்கு புதுதெம்பை கொடுத்தது. திமுகவிடம் இருந்து வந்த அந்த தொகுதிகளில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றோம். அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தல்களிலும் நாம் வெற்றிபெற வேண்டும்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் எப்படி கடுமையாக உழைத்தீர்களோ அதைவிட இருமடங்கு ஒற்றுமையோடும், எழுச்சியோடும் வெற்றிக்காக பாடுபட வேண்டும். வேட்பாளர் யார் என்று பார்க்கக்கூடாது. நமக்கு வேட்பாளர் இரட்டைஇலை தான். அந்த சின்னத்தை வெற்றிபெற வைக்க அயராது உழையுங்கள். நமது எண்ணம், நோக்கம், செயல்கள் எல்லாம் மீண்டும் இரட்டைஇலை வெற்றிபெற்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும். அப்பொழுது தான் அம்மா அவர்கள் கூறியதைப்போல் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், அரங்கநாதன், ஒன்றிய அவைத்தலைவர்கள் அன்பழகன், ராமாகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர்கள் வெற்றிவேல், சக்திவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரபாகரன், மாவட்ட மாணவரணி தலைவர் எழிலரசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரவிசங்கர், சீனு, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்கள் சிவக்குமார், ஜெய்சங்கர், பாசறை செயலாளர்கள் வெங்கடேசன், பற்குணன், ஒன்றிய மாணவரணி செயலாளர்கள் துரைக்கண்ணு, ரவி, விவசாய அணி செயலாளர் சண்முகம், மகளிரணி செயலாளர் செல்வி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்ரமன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.