தற்போதைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உலகெங்கும் நிலவுகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த அசாதாரன சூழ்நிலையிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்திய பெருநாட்டிற்கே முன்னுதாரணமாக விளங்குகின்றது.

விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முதலீட்டாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் முதலமைச்சர் எடுத்து வருகின்ற சீரிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மிக விரைவிலே இயல்பு நிலைக்கு திரும்புகிற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியினை 100 சதவீதம் நாம் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

நோய் தடுப்புப் பணியில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மாநகராட்சி பகுதிகளிலும், கிராமப்புற பகுதிகளிலே ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாகவும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு ஆரம்ப நிலையிலேயே நோய் தொற்றை கண்டறிந்து அவர்களுக்கு அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஒருவார காலமாக நமக்கு ஆறுதல் தருகிற புள்ளி விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டோர் 8517 நபர்களாவர். மாவட்ட ஆட்சித்தலைவரின் நேரடி கண்காணிப்பில் மாநகராட்சி ஆணையாளரும், அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வரும் குழுவாக இனைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதின் காரணமாக 5070 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சிகிச்சையில் 3280 நோயாளிகள் உள்ளனர். 2235 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்ட 156289 நபர்களில் 110864 பரிசோதனைகள் எடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து மதுரை மாவட்டத்தில் தான் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 730 மருத்துவர்களும், 890 செவிலியர்களும், 3800 களப்பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை ஆரம்ப நிலையில் 5 சதவிகிதமாக இருந்தது. பின்பு பல்வேறு காரணங்களினால் 15 முதல் 18 சதவிகிதமாக அதிகமானது.

முதலமைச்சர்அறிவுறுத்தலின் படி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதாலும், நாம் மேற்கொண்ட தீவிர மருத்துவ சிகிச்சை காரணமாகவும் நோய்த்தொற்று 7 சதவிகிதமாக கட்டுக்குள் கொண்டு வரபட்டது, தற்போது 3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் கொரோனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 7 முதல் 8 சதவிகிதமாக உள்ளது. அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கூடுதல் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதால் தினமும் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை தற்பொழுது 4500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை மையங்களில் பணிபுரியும் அலுவலர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுரைக்கேற்ப மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளினால் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. இருந்த போதிலும் மாநகராட்சி பகுதிகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மதுரை அரசு அரசு இராஜாஜி மருத்துவமனையில் 1937 படுக்கைகளும், தனியார் மருத்துவமனையில் 591 படுக்கைகளும், கோவிட் கேர் சென்டர்களில் 4000 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. மூச்சுத்தினறல் ஏற்படுவதினால் ஏற்படும் மரணங்களை குறைக்க வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ள படுக்கைகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்துறையை ஊக்குவிப்பதற்காக ரூ.10,400 கோடி மதிப்பில் ஆறு மாவட்டங்களில் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 13,500 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்ற வகையிலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும் முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஒருபுறத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளும், மறுபுறத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற பணிகளும், தொழில்துறையை மீட்டெடுத்து புதிய வேலை வாய்ப்பை உருவாக்கி பொருளாதாரத்தை சீர்படுத்துகின்ற பணிகளும் என அனைத்துப்பணிகளையும் முதலமைச்சர் ஒருங்கிணைத்து செயல்படுத்தி நல்ல முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நோய்த்தொற்று குறைந்து வருகிறது. மக்கள் கூடுகின்ற இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட காவல்துறை ஆணையாளர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வியாபாரம் தடைபடாது, மக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

மாநகரின் அனைத்து பகுதிகளும் 24 மணி நேரமும் பறக்கும் படையினரால் கண்காணிக்கப்படுகிறது. நோய்த் தொற்றில்லாத மதுரை மாவட்டத்தை உருவாக்குகின்ற பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மக்கள் அச்சத்தை விட்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவுதல் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சங்குமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.