தற்போதைய செய்திகள்

வெளிமாவட்டங்களில் இருந்து திருப்பூர் வருவோர் முழுமையாக கண்காணிக்கப்படுகிறார்கள்- அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்

திருப்பூர்

வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிபவர்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக அலுவலக கூட்டரங்கில், நேற்று திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில்,

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியின் வளர்ச்சிக்காக விரிவடைந்த பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்டம், திறந்தவெளி காலியிடம் மேம்பாடு செய்தல், ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம், புதிய குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், மாநாட்டு அரங்கம் கட்டுதல், நவீன பேருந்து நிலையம், பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம், எல்.இ.டி. தெருவிளக்குகள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைத்தல்,

தினசரி மற்றும் வாரச்சந்தை மேம்படுத்துதல் மற்றும் பூ மற்றும் மீன் மார்க்கெட் மேம்படுத்துதல், ஓடைகள் மேம்பாடு செய்தல் சாலை மேம்படுத்துதல், சங்கிலிப்பள்ளம் ஓடை ஓரமாக தாராபுரம் சாலை முதல் நொய்யல் ஆற்றின் தெற்கு கரையோரம் வரை மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசு திருப்பூர் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்து அதற்காக ரூ.948.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைவாக முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், தற்போது திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் தாராபுரம் சாலை கோவில் வழியில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட உள்ளது. மேலும், தினசரி மார்க்கெட் கடைகளும் விரைவில் காலி செய்யப்பட்டு பழைய மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் செயல்படவுள்ளது. என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் முதலமைச்சரின் அறிவுரையின் படி, மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக கொரோனா வைரஸ் நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிபவர்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்கி வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிந்து கொண்டும். சமூக இடைவெளியினை முழுமையாக கடைபிடித்து நோய் தொற்றிலிருந்து நம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக, பிரதம மந்திரியின் தெருவோர வியாபாரிகளுக்கான சுய சார்பு நிதித்திட்டத்தின் கீழ், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சார்ந்த 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான கொரோனா சிறப்பு கடனாகவும் 4 தெருவோர வியாபாரிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.40,000 கான கடனுதவி, ,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 1 நபருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.1,50,000க்கான தீருதவித்தொகை ஆகியவற்றை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல்ஹமீது, மகளிர் திட்ட இயக்குநர் கோமகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரேமலதா, மாநகர பொறியாளர் ரவி, மாநகராட்சி செயற்பொறியாளாகள் திருமுருகன், முகமது சபியுல்லா, உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், திருப்பூர் தொழில் துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.