கோவை

ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – கழக செய்தி தொடர்பாளர் கோவை கே.செல்வராஜ் பேட்டி

கோவை

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் விவசாயிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ஆனால் கழக ஆட்சியில் நடந்ததாக வரலாறு தெரியாமல் பேசும் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கழக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

கோவையில் கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை கே.செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக ஆட்சியில் 1970ல் மின் கட்டணம் உயர்த்தியமைக்காக போராட்டம் நடத்திய விவசாயிகளை சுட்டுக் கொன்றதை மறைத்து பொய்யான தகவலை திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். சர்க்கஸ் கம்பெனி நடத்தி வரும் ஸ்டாலின் வரலாறு தெரியாமல் பேசுகிறார். கட்சியில் உள்ள மூத்தவர்களிடம் 1967 முதல் என்ன நடந்தது என்று தெரிந்து பேச வேண்டும்.அவதூறு மட்டுமே பரப்பிவரும் ஸ்டாலின் புதிதாக ஒரு பொய் கதையை அவிழ்த்து விட்டுள்ளார்.

1970-ல் திமுக ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி மின் கட்டணத்தை உயர்த்தியதால் மின் கட்டண உயர்வை கண்டித்து விவசாய சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தியது. அப்போது கருணாநிதி மலபார் காவல் துறையினர் மூலம் கண்மூடித்தனமாக விவசாயிகளை தாக்கினார். குறிப்பாக விவசாய சங்க தலைவர்களான நாராயணசாமி நாயுடு, டாக்டர் சிவசாமி ஆகியோர் போலீசாரின் தாக்குதலால் கால் முறிந்தும் அடிபட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர். இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து விவசாயிகள் எங்கு போராட்டம் நடத்தினாலும், பச்சைத்துண்டு தோளில் போட்டு இருந்தாலும் அவர்களை திமுகவினர் குண்டாந்தடியால் தாக்கியதை எந்த விவசாயிகளும் மறக்க மாட்டார்கள். இதையடுத்து கருணாநிதியை கண்டித்து மாட்டுவண்டி போராட்டம் நடத்தினார்கள். இதில் கோவை, திருவாரூர், தஞ்சாவூர், மதுரை, திருச்சி உட்பட பல இடங்களில் விவசாயிகளை ஈவு இரக்கமில்லாமல் மிருகத்தனமாக குருவி சுடுவது போல காவல்துறை மூலம் துப்பாக்கி சூடு நடத்தி விவசாயிகளை கொன்றார்கள்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்த விவசாயிகளை ஒரே இடத்தில் பெருமாநல்லூரில் அடக்கம் செய்தனர். அது இப்போதும் நினைவிடமாக உள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்தது 1970 திமுக ஆட்சியில். கழகம் ஆட்சிக்கு வந்தது 1977-ல். இது கூட தெரியாமல் கழக ஆட்சியில் விவசாயிகள் கொல்லப்பட்டனர் என பொய்யான தகவல்களை ஸ்டாலின் பரப்பி வருகிறார்.
இனிமேலாவது வரலாறு தெரியாமல் பொய்யாக அப்பட்டமாக கழக ஆட்சியில் நடந்ததாக பேசுவதை நிறுத்துங்கள். மன்னிப்பு கேளுங்கள். கழக ஆட்சியில் இந்த சம்பவம் நடந்ததை நிரூபிக்க தயாரா?

புரட்சித்தலைவர் ஆட்சியில் தான் இரண்டு ஏக்கர், ஐந்து ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த உண்மையை மறைத்து இலவச மின்சாரம் கொடுத்தது திமுக அரசு என ஸ்டாலின் கூறி வருகிறார் புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல் பொய்யான தகவல்களை ஸ்டாலின் பேசுவதை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள்.

1974ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது வறட்சியாக உள்ளது என்று ரசாயன பொடியை தூவி மழைபெய்ய வைக்கிறேன் என கூறி 100 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை ஏமாற்றியதை மறக்க முடியுமா? திமுக ஆட்சியில் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, 2007ல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக அரசு இதழில் வெளியிட்டு அமல்படுத்தாது ஏன்?

காங்கிரஸ் தயவால் மைனாரிட்டி அரசு நடத்திய திமுக பதவி சுகத்திற்காக வாயே திறக்காமல் காவேரி தீர்ப்பை அமல்படுத்தாமல் டெல்டா விவசாயிகளின் உரிமையில் மண்ணை அள்ளிப்போட்டு துரோகம் செய்ததை விவசாயிகள் மன்னிப்பார்களா? விவசாயிகளின் பொதுஜன விரோத சக்தியாக செயல்பட்ட திமுக எப்போதெல்லாம் திமுக ஆட்சி செய்ததோ அப்போதெல்லாம் விவசாயிகளுக்கு துரோகம் செய்த திமுக என்பதை ஸ்டாலின் மறந்து விட்டு பொய்யாக பேசுகிறார்.

இவ்வாறு கழக செய்தி தொடர்பாளர் கோவை கே.செல்வராஜ் கூறினார்.