பெரம்பலூர்

வாரிசு அரசியல் நடத்தி ஆதாயம் தேடும் கூட்டம் திமுக – பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் கடும் தாக்கு

பெரம்பலூர்

வாரிசு அரசியல் நடத்தி ஆதாயம் தேடும் கூட்டம் திமுக என்று பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் கூறினார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணைச் செயலாளர்கள் பெரியம்மாள் நீலன், ஜெயலட்சுமி கனகராஜ், கஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி கருணாகரன், ஜெயம் கலியமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரா.தமிழ் செல்வன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்

இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி ராமச்சந்திரன் பேசியதாவது:-

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க கடுமையாக பாடுபட வேண்டும். கழகத்தில் மட்டும் தான் வாரிசு அரசியல் என்பது கிடையாது. ஆனால் திமுகவில் அப்படி இல்லை. கருணாநிதி முதல்வர், கருணாநிதி மகன் ஸ்டாலின் துணை முதல்வர் கருணாநிதியின் பேரன் மத்திய அமைச்சர் என்று வாரிசு அரசியல் நடத்தி ஆதாயம் தேடும் கூட்டம் திமுக தான்.

கருணாநிதி மறைவுக்குப் பின் அவரது மகன் ஸ்டாலின் அவர் தந்தை கொள்கையை முன்னெடுத்து அவரது மகன் உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளராக பதவி கொடுத்து அவரை அரசியலில் ஈடுபடுத்தி வருகிறார். மேலும் தனது கட்சிக்காரர் திருமணத்திற்கு கூட நேரில் செல்லாமல் இணையதளத்தின் வாயிலாக ஆசீர்வாதம் செய்யும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான். மக்களை சந்திக்காமல் அவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கனவு கண்டு வருகிறார் அது கடைசி வரை கனவாக போகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் நிருபித்து காட்டுவார்கள். ஆகவே 2021 தேர்தலில் கழகம் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் பேசினார்.