சிறப்பு செய்திகள்

திமுக முன்னாள் அமைச்சர்கள் எங்கு போக வேண்டுமோ அங்கு விரைவில் போய்விடுவார்கள் – முதலமைச்சர் பேச்சு

சென்னை

திமுக முன்னாள் அமைச்சர்கள் விரைவில் எங்கே போக வேண்டுமோ அங்கு போய்விடுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  ஈரோடு மாவட்டம், அத்தாணியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:-

திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து வழக்குகளும் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதுவரை வாய்தா வாங்கி தப்பித்து வந்தீர்கள். நேற்றையதினம் உயர்நீதிமன்றம், வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொண்டே இருக்கிறீர்கள். இனி வாய்தா கொடுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வழக்கை முடித்தாக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். வரும் மார்ச் ஏப்ரல் மாதத்திற்குள் உங்களின் வழக்குகள் மீதான விசாரணை முடிந்துவிடும். அவர்கள் எல்லாம் எங்கே போக வேண்டுமோ அந்த இடத்திற்கு போய் விடுவார்கள். கழக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை மக்களிடம் பரப்பி வருவதை விட்டுவிட்டு, நேர்மையான வழியில் மக்களை சந்தித்து, ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று சொல்லி வாக்கு கேளுங்கள். நீங்கள் மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டீர்கள் செய்தும் பழக்கம் கிடையாது.

நாங்கள் நல்ல சாலைகள் போட்டுள்ளோம், தடுப்பணைகளை கட்டியுள்ளோம். பவானிசாகரிலிருந்து காளிங்கராயன் வரை 7 இடங்களில் தடுப்பணைகள் கட்ட உள்ளோம். டெண்டர் விடப்பட்டுள்ளது, பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்படும். அதுமட்டுமல்ல அம்மா இருசக்கர வாகனம் கொடுப்போம் என்று சொன்னோம், கொடுக்கின்றோம். தாலிக்கு தங்கம் திட்டத்தில் ஒரு பவுன் தங்கம் கொடுக்கின்றோம். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் 2 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்ததை அம்மாவின் அரசு உயர்த்தி, தற்போது 5 லட்சம் ரூபாய் வரை கொடுக்கின்றோம். ஏழை எளிய மாணவர்களும் மருத்துவ படிப்பை பயில வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது.

கடந்த ஆண்டு 6 அரசுப் பள்ளி மாணவர்களால் தான் மருத்துவம் பயில முடிந்தது. இந்த ஆண்டு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக 313 மாணவர்கள் மருத்துவம் பயிலக்கூடிய வாய்பினை உருவாக்கி தந்துள்ளோம். இன்றைக்கு அரசுப் பள்ளிகளில் ஏழை எளிய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோரது குழந்தைகள் தான் படிக்கின்றார்கள். நானும் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். அந்த ஏழை எளிய மக்களின் குழந்தைகள் மருத்துவம் பயில வேண்டுமென்ற கனவை நனவாக்கியது அம்மாவுடைய அரசு தான்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.