குறிப்பிட்ட அரசு பேருந்துகளில் மட்டுமே இலவச பயணத்துக்கு பெண்கள் அனுமதி

பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு
சென்னை,
குறிப்பிட்ட அரசு பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற பேருந்துகளில் அனுமதிக்கப்படுவதில்லை என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று இரண்டாவது நாளாக 2022 -2023-ம் ஆண்டு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக நடந்த கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ துணை கேள்வி ஒன்றை எழுப்பி பேசியதாவது:-
இது மக்களின் கோரிக்கை. பெண்களின் கோரிக்கை. அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்றவுடன் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால், மதுரை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் தான் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற பேருந்துகளில் பெண்கள் இலவச பயணத்திற்கு அனுமதிக்கபடுவதில்லை.
இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடிவதில்லை. திரும்பவும் ஷேர் ஆட்டோவுக்கு சென்று விட்டனர்.
மக்கள் கஷ்டப்படுகிறார்கள். பெண்களின் குரலாக இந்த நேரத்தில் நான் பேசுகிறேன். அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணத்திற்கு அனுமதிக்கபடுகிறார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு போக்குவரத்துறை அமைச்சர், இந்த திட்டம் நல்லமுறையில் நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டுமே மகளிர் அனுமதிக்கப்படுவர்.
அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தால் பிறகு எப்படி போக்குவரத்து கழகத்தை நடத்துவது? ஏற்கெனவே ரூ.48,000 கோடி நஷ்டத்தில் போய் கொண்டிருக்கிறது என்று பதிலளித்தார்.