தற்போதைய செய்திகள்

சளி, காய்ச்சலுக்கு மருந்து வாங்கி செல்பவர் விவரங்களை சேகரிக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவு

கரூர்

கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சளி, காய்ச்சலுக்கு மருந்தகங்களில் மருந்து வாங்கி செல்பவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் முன்னிலையில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துறைவாரியாக விரிவாக ஆய்வு செய்தார். மேலும், இனிவரும் காலங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கரூர் மாவட்டத்தில் ஒற்றை இலக்காக இருந்த கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, சமீபகாலமாக இரண்டு இலக்க எண்ணாக மாறியுள்ளது.

இன்றைய சூழலில் கொரோனா தொற்று ஏற்படும் நபர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டிருக்கும், யார் மூலம் அவருக்கு தொற்று பரவியிருக்கக்கூடும் என்பதை முழுமையாக ஆராய்ந்து தகவல்களைப் பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 50 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர் வீதம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாகச்சென்று எவருக்கேனும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதா என்றும், வயது முதிர்ந்த நபர்கள் இருந்தால் அவர்களின் உடல்நிலை குறித்தும் ஆய்வு செய்யும் பணி முடுக்கி விடப்பட வேண்டும் என்று சம்மந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வீட்டுக்கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டவர்கள் வீட்டில் தான் இருக்கின்றார்களா என்பதை சம்பந்தப்பட்ட பகுதிகளின் கிராம நிர்வாக அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்களில் சளி, காய்ச்சல் என்று கூறி மருந்துகள் வாங்கிச் செல்வோரின் பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டு சுகாதாரத்துறையிடம் வழங்க வேண்டும் என்றும், சுகாதாரத்துறையினர் அவர்களைத் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் தொழில் நகரமாகும். எனவே, இங்கு இயங்கி வரும் ஆயத்தஆடை உற்பத்தி, கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றுகின்றார்களா, கிருமிநாசினி முறையாக தெளிக்கப்படுகின்றதா, சமூகவிலகல் முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா என்பதை அரசுத்துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தொழில்நிறுவனங்களில் பேருந்துகளில் அதிக அளவில் பணியாளர்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி, பேருந்துகளை கண்காணிக்க வேண்டும் என்றும் அரசுத்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் உணவு இடைவேளையில் கூட்டமாக அமர்ந்து உண்ணுவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உணவு இடைவெளியினை மூன்று பிரிவுகளாக பிரித்து பகுதி பகுதியாக பணியாளர்களை உணவருந்த அனுமதிக்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல வணிக நிறுவனங்கள் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர்கள் சமூகவிலகலை முறையாக பின்பற்றுகிறார்களா என்றும், அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்றும் சம்மந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களை எச்சரிக்கும் விதமாக முதலில் நோட்டீஸ் வழங்க வேண்டும். அதன்பிறகும் விதிகளை மீறும் வகையில் செயல்படும் நிறுவனங்களை பூட்டி சீல் வைத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவரின் முயற்சியால் சுமார் 7 டன் அளவிலான கபசுரக் குடிநீர் சூரணப்பொடி வாங்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வீடு, வீடாக வழங்கப்பட்டு வருகின்றது. எனது சொந்த செலவில் 1 லட்சம் குடும்பங்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் சூரணப்பொடிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இன்றைய நிலவரப்படி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 111 நபர்களும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 நபர்களும், திருச்சியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 115 நபர்கள் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 20.07.2020 அன்று 8 நபர்களும், 21.07.2020 அன்று 16 நபர்களும், 22.07.2020 அன்று 23 நபர்களும், இன்று(23.07.2020) 10 நபர்களும் என்ற நிலையில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உள்ளது.

குறிப்பாக ஓசூர் சென்று வந்த இரண்டு நபர்கள் மூலமே அதிக நபர்களுக்கு, சுமார் 20 நபர்களுக்கு மேல் தொற்று பரவியிருக்கின்றது. இந்த தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்களும் நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முதலமைச்சர் கூறியபடி விழித்திரு, விலகியிரு, வீட்டில் இரு என்ற கோட்பாட்டை அனைவரும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் எஸ்.கவிதா, குளித்தலை சார் ஆட்சியர் ஷே.ஷேக்அப்துல்ரகுமான், கரூர் வருவாய் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) தெய்வநாயகம், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.