தற்போதைய செய்திகள்

திமுக ஆட்சி காலத்தில் கொரோனா வந்திருந்தால் கோடிக்கணக்கான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

மதுரை

திமுக ஆட்சி காலத்தில் கொரோனா வந்திருந்தால் கோடிக்கணக்கான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை ஒரு ஆன்மிக இயக்கம். ஒரு சிலர் சொல்கிற கருத்துகளை வைத்து முடிவெடுக்க முடியாது. எதுவாக இருந்தாலும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சேர்ந்து தான் முடிவெடுப்பார்கள்.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இந்து மதத்தை பதம் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட ஈனத்தனமான செயல்களை செய்வது திமுக இயக்கம். ஸ்டாலினுக்கு என்ன தெரியும். ஒரு அறையில் அமர்ந்து மேக்கப் போட்டு கொண்டு 67 வயது மிக்கவர் 21 வயது இளைஞனைப் போன்று நடித்து கொண்டு இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

திமுகவை பொறுத்தவரையில் பிரச்சனையான சமயத்தில் அதே பிரச்சனையை குத்தி குத்தி பெரிதாக்கி அதில் அரசியல் லாபம் எதிர்ப்பார்த்து வருகிறார். பால்வளத்துறையில் பணியாற்றி தவறு செய்பவர்களுக்கு துணை நிற்பவர்களுக்கு அதிமுக அரசும் துணை நிற்காது.

குறிப்பாக தரமில்லாத பாலை ஆவின் ஏற்றுக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பேர் விளம்பரத்திற்காக மலையிலிருந்து பாலை கொட்டி வீடியோ பதிவு செய்து வருகின்றனர். உண்மையான பால் வியாபாரிகள் யாரும் பாலை வீணாக கொட்ட மாட்டார்கள்.

உலகம் முழுவதும் கொரோனா பிரச்சனை உள்ளது. நியூயார்க் நடுங்கிப் போய் கிடக்கின்றது. தமிழக மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. இதுவே திமுக ஆட்சி காலத்தில் இது போன்ற கொரோனா வந்திருந்தால் கோடிக்கணக்கான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரோடு நாட்டை விட்டே ஓடி இருப்பார். ஏனென்றால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருந்த போது அவர்களால் எந்த நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதை சரிசெய்ய முடியாமல் விழி பிதுங்கி நின்றார்கள். அதிமுக ஆட்சி வந்த பின் தான் மின்சாரம் சரியானது. 5 ரூபாய் இல்லாமல் திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்தோம் என்று சொன்னவர்களுக்கு இன்று எப்படி இவ்வளவு சொத்து வந்தது. தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.