தற்போதைய செய்திகள்

எரிசினம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துமனையாக தரம் உயர்த்த வேண்டும்

பேரவையில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை

சென்னை

எரிசினம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டுக் கொண்டார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முன்னாள் துணை சபாநாயகரும், கழக சட்டமன்ற
உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:-

எரிசினம்பட்டியில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உடுமலைபேட்டை உள்ளது. ஆனால் எரிசனம்பட்டியிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் மாவடப்பு, காட்டுப்பட்டி, குறிப்பட்டி, கீழ்குருமலை, மேல்குருமலை, பூச்சிகோட்டாம்பாறை, ஈசல்திட்டு, மயிலாடும்பாறை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலே தேவனூர் புதூர், ஆண்டிபூர்,

ராவணாபுரம், வல்லக்குண்டாபுரம், கரட்டூர், கரட்டுமடம், புங்கமுத்தூர், சின்ன பொம்மன்சாலை, உடுக்கம்பாளையம், கொடுங்கியம், ஜிலேநாயக்கன்பாளையம், ரெட்டிபட்டி, சாலையூர், சர்க்கார்புதூர் போன்ற மலையடிவார கிராமங்கள் உள்ளள. கிட்டத்தட்ட 30 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். ஆதிவாசிகள் பெருமளவு உள்ளனர்.

அடிக்கடி விஷக்கடி, பாம்பு கடி போன்றவை ஏற்படும்போது இவர்களை இரவு நேரத்தில் உடுமலைக்கு கொண்டு செல்வது சிரமமாக இருக்கிறது. எனவே எரிசினம்பட்டி தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம்

உயர்த்தி தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மத்திய அரசின் அனுமதி பெற்று அரசு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்தார்.