தற்போதைய செய்திகள்

மக்களுக்கு சேவை செய்வதே கழகத்தின் ஒரே லட்சியம் – மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் பேச்சு

பெரம்பலூர்

மக்களுக்கு சேவை செய்வதே கழகத்தின் ஒரே லட்சியம் என்று பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வெற்றி குறித்து கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் கொளக்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவருமான என்.கே.கண்ணன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் பேசியதாவது:-

ஆலத்தூர் ஒன்றியம் கழகத்தின் கோட்டையாக உள்ளது எனக்கு பெருமையாக உள்ளது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் 2 ஏக்கர் நிலம் தருகிறேன் என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்தவர்கள் தான் தி.மு.கவினர். பொது மக்களை அழைத்து கிராம சபை கூட்டம் நடத்தினால் பொது மக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். கேள்வி கேட்கக்கூடாது என்றால் அறிவாலயத்தில் கட்சிக்காரர்களை வரவழைத்து நான்கு சுவற்றிற்குள் கூட்டம் நடத்த வேண்டியது தானே? கழகத்தின் ஒரே லட்சியம் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான். தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள் நலனில் அக்கறை கிடையாது. தனது குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்.

கொரோனா காலத்தில் மக்களை சந்தித்த முதல்வர் யார்? தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தான். மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். கொரோனா காலத்தில் ஸ்டாலின் வீட்டை விட்டு வெளியே வந்தாரா ? கணினியில் கூட்டம் நடத்தினார். வருங்கால முதலமைச்சர் ஸ்டாலின் என்று மட்டுமே தி.மு.க. தொண்டர்கள் கடைசிவரை போஸ்டர் ஒட்டிகொண்டே இருக்க வேண்டியதுதான். இதைத்தான் ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசினார்.