தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி விட்டது

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
சென்னை
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி விட்டது என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற 2022- 2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
நிதிநிலை அறிக்கை பக்கம் 75-ல், தி.மு.க.வின் முக்கிய வாக்குறுதியான, மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள், உடனடியாக எடுக்கப்பட வேண்டுமென்று, முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதை பெற தகுதியுடையவர்கள் யார், யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும், இதன் அடிப்படையில் இந்த அரசு எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது, இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
இதிலிருந்து, மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது, இப்போதைக்கு செயல்படுத்தப்படாது என்பதும், மாநில நிதிநிலை மேம்படும்போது, நகைக்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை செயல்படுத்தியதுபோல், ஒரு சிலருக்கு மட்டும் அளித்துவிட்டு, தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக தம்பட்டம் அடிக்கப்படும் என்பதும், தெள்ளத் தெளிவாகிறது. இதன்மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்பது மட்டும் உறுதியாகிறது.
தி.மு.க.விற்கு மதுவை பற்றி உறுதியான கொள்கை ஒன்று இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது கடுமையாக எதிர்ப்பதும், ஆளும் கட்சியாக இருக்கும்போது அதன் விற்பனையை அதிகரிப்பதும் தான், அந்த கோட்பாடு. 2016-ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றப்படும் என்றும், இதனால் ஏற்படும் இழப்பினை ஈடுசெய்ய, புது திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், வாக்குறுதி அளிக்கப்பட்டது.
மதுவினால் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தி.மு.க.வினரால் பிரச்சாரம் செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, படிப்படியாக மது விலக்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தி.மு.க. வாக்களித்து இருந்தது. ஆனால், இவற்றிற்கு முற்றிலும் மாறாக, மதுவின் மூலம் வரும் வருமானத்தை பெருக்கும் நடவடிக்கைகளை, இந்த அரசு எடுத்து வருகிறது. தற்போது 36,000 கோடி ரூபாயாக உள்ள டாஸ்மாக் வருமானம், அடுத்த ஆண்டு 40,000 கோடி ரூபாயாக உயரும் என கூறப்படுகிறது.
மது ஒவ்வொரு குடும்பத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், இந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கடுமையாக வற்புறுத்தியவர் முதலமைச்சர். போராட்டங்கள் எல்லாம் நடத்தப்பட்டன. ஆனால், இன்று ஆட்சிக்கு வந்ததும், இதனை முற்றிலும் மறந்து, “பூரண மதுவிலக்கு” என்ற வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, டாஸ்மாக் மூலம் வருமானத்தை பெருக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் நடத்தப்படும் பார்கள் மூடப்பட வேண்டுமென்ற தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், நடவடிக்கை எடுத்துள்ளார். அதே சமயத்தில், மதுவிலக்கை மேற்கொள்ள ஒரு துரும்பை கூட இதுவரை கிள்ளி போடவில்லை. ஒருவேளை இதற்கு பெயர் தான் சொல்லாததையும் செய்வோம் என்பது போலும்!
2016-ம் ஆண்டு அளிக்கப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில், டாஸ்மாக் வருமான இழப்பினை ஈடுசெய்ய, புது திட்டங்கள் வகுக்கப்படும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அப்படியென்றால், மது வருவாயை புறந்தள்ளி, பிற வகைகளில் வருவாயை பெருக்க திட்டங்கள் ஏற்கெனவே கைவசம் இருக்கின்றன என்பதுதானே அர்த்தம். எனவே, அந்த திட்டங்கள் மூலம் வருவாயை பெருக்கவும், தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி, வாக்குறுதிகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், அரசு துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள, 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவதற்கு, இன்னும் 45 நாட்களே இருக்கின்ற நிலையில், பணியமர்த்தல் மற்றும் பயிற்சிக்கான விதிகளில், சில திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியினை, இவ்வாண்டு தொடங்கி இருப்பதாகவும், மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை, ஆறுமாத கால அளவிற்குள் முன்மொழிவதற்காக, ‘மனிதவள சீர்திருத்தக் குழு’ ஒன்று அமைக்கப்படும் என்றும், நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இது, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதை மேலும் தாமதப்படுத்தும், என்றே நான் கருதுகிறேன்.
ஆண்டிற்கு 70 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டால்தான் ஐந்தாண்டுகளில் 3.5 லட்சம் பணியிடங்களை நிரப்ப முடியும். இது ஒரு சாதாரண கணக்கு. ஆனால், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கிட்டத்தட்ட 6,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த நிலை நீடித்தால், தி.மு.க.வின் வாக்குறுதியில் பத்து விழுக்காட்டினை கூட, இந்த ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவாகும் என்பதை எடுத்துக்கூற விரும்புகிறேன்.
எனவே, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழகத்திலுள்ள இளைஞர் சமுதாயம் வெகு ஆவலோடும், எதிர்பார்ப்போடும் காத்திருக்கிறது என்பதை நினைவில் கொண்டு, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
புதிதாக இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதற்கான திட்டங்கள் ஏதும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. இந்த வாக்குறுதியையும், விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, தங்கள் வாயிலாக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.