தமிழகம்

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை – அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது

சென்னை

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை வழங்கப்படும் என்று ஊரடங்கு நீட்டிப்பின் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு நேற்றுமுன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. இதனை அமல்படுத்துவதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் ஆட்கள் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதுசார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது.65 வயதுக்கு மேற்பட்டவர்கள், வேறு நோய்கள் உள்ளவர்கள்,கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைவான குழந்தைகள், அத்தியாவசியகாரணங்களுக்காக மட்டும் வெளியே வரலாம்.இல்லை என்றால் வீட்டிலேயே இருக்க வேண்டும். ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி தொற்றுக்கான அபாயத்தை தவிர்க்கலாம். ஒவ்வொரு அலுவலகத்திலும் ஊழியர்கள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொருவரும் இந்தசெயலியை பதிவிறக்கம் செய்து அதில் தங்களின் உடல் நிலையை தொடர்ந்து பதிவுசெய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் ஒவ்வொருவரின் உடல் நிலையை சரியான நேரத்தில் அரசு அறிந்து அவர்களை அபாயத்தில் இருந்து மீட்க முடியும்.பொது இடங்களிலும், பயணத்தின்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்துதல், பான், குட்கா, புகையிலை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் தேவையான பொருட்களை அங்குள்ள வீடுகளுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் வழங்குவதை அந்தப் பகுதிக்கான நிர்வாகம் உறுதி செய்யும். அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளில் கை கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவை கண்டிப்புடன் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.